ஹமாஸ் எடுத்த புதிய அஸ்திரம்.. பிணைக்கைதிகளை மீட்க இறங்கி வருமா இஸ்ரேல்?


ஹமாஸ் எடுத்த புதிய அஸ்திரம்.. பிணைக்கைதிகளை மீட்க இறங்கி வருமா இஸ்ரேல்?
x

இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதலை தொடர்ந்தால் பிணைக் கைதிகளை கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் அமைப்பு மிரட்டியிருக்கிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நான்காவது நாளாக இன்றும் நீடிக்கிறது. காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி திடீரென தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் தரப்பில் போர் பிரகடனம் செய்யப்பட்டு பதிலடி கொடுக்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள காசா மீது தொடர்ந்து வான்வெளி தாக்குதல் நடத்தி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் 7ம் தேதி எல்லையை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தியபோது, எல்லையோர பகுதிகளில் இருந்து பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். குழந்தைகள் உள்பட சுமார் 150 பேர் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி உள்ளனர்.

இப்போது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், பிணைக் கைதிகளை கொன்றுவிடுவதாக ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் காசாவில் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒரு பிணைக் கைதியை கொல்வோம் என கூறி உள்ளனர்.

இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்திய சமயத்தில் காசா பகுதியில் ஏற்கனவே 4 பிணைக் கைதிகள் இறந்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலியர்களா அல்லது பிற நாடுகளைச் சேர்ந்தவர்களா? என்ற விவரம் வெளியாகவில்லை.

ஹமாசின் தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுத்து வரும் இஸ்ரேல், அடுத்து தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது. இதற்காக மூன்று லட்சம் வீரர்களை களமிறக்க உள்ளது. இந்த சூழ்நிலையில் பிணைக்கைதிகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் இஸ்ரேல் அரசுக்கு பிரச்சினையாக உள்ளது.

பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை நடத்துவதில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சிகளும் முழு ஆதரவை அளித்துள்ளன.

எனினும், பிணைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை மீட்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கவில்லை என்றால், மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இஸ்ரேலிய மக்கள் தங்கள் பிரதமரை மன்னிக்க மாட்டார்கள் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். 'மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டீர்கள், பிணைக்கைதிகளை மீட்டு கொண்டு வாருங்கள்' என்பதே மக்களின் அணுகுமுறையாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. முன்வைத்த காலை பின்வைக்காமல் காசா மீது தாக்குதலை தொடர வேண்டும், அல்லது பிணைக்கைதிகளை மீட்பதற்காக தற்காலிகமாக போரை நிறுத்த வேண்டும். பிணைக் கைதிகளின் உயிரை பயணம் வைத்து தாக்குதலை தொடருமா? அல்லது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Next Story