முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 70 வயது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 70 வயது
x

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 70 வயது. அரசியலில் முதிர்ச்சி, ஆற்றலில் முதிர்ச்சி, செயலில் முதிர்ச்சி, நிர்வாகத்தில் முதிர்ச்சி, சிந்தையில் முதிர்ச்சி, திட்டமிடுதலில் முதிர்ச்சி என்று அனைத்து முதிர்ச்சிகளையும் உள்ளடக்கி ஒளிவிடும் மேன்மைமிகு வயது.

மறைந்த கலைஞர் கருணாநிதி மும்முனை போராட்டத்தில் கலந்துகொண்ட நேரத்தில்தான், மு.க.ஸ்டாலின் பிறந்தார். அவருக்கு அய்யாத்துரை என்றே பெயர் சூட்ட கருணாநிதி முடிவு எடுத்திருந்தார். அய்யா என்றால் தந்தை பெரியாரையும், துரை என்றால் பேரறிஞர் அண்ணாதுரை என்பதையும் நினைவூட்டுவதற்காகவே அந்த பெயரை சூட்ட நினைத்திருந்தார்.

அந்த நேரத்தில்தான், சோவியத் நாட்டின் இரும்பு மனிதர் ஸ்டாலின் இறந்தார். அவருக்கு சென்னை கடற்கரையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட கருணாநிதி, "என் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன்" என்று அறிவித்தார். ஆக, இரும்பு மனிதரின் பெயர்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் என்பது அவருடைய ரத்தத்திலேயே ஊறியது. கருணாநிதி தன் 14 வயதில் திருவாரூர் வீதியில் தோளில் தமிழ்க்கொடியை ஏந்திக்கொண்டு, "ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடிவந்த கோழை நாடிதல்லவே!" என்று முழங்கிக்கொண்டு சென்றார். அதே 14 வயதில் மு.க.ஸ்டாலின் தன் தோளில் தி.மு.க. கொடியை ஏந்திக்கொண்டு கோபாலபுரம் வீதிகளில் பிரசாரம் செய்தார். அவரது மாணவ பருவம் முழுவதும் அரசியல் பணிகளையும் விடவில்லை. 1975-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி அவருக்கும், துர்காவுக்கும் சென்னையில் நடந்த திருமணம் பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதிகள் வி.வி.கிரி, நீலம் சஞ்சீவரெட்டி, மத்திய மந்திரி ஜெகஜீவன்ராம், ம.பொ.சி. உள்ளிட்டோர் பங்கேற்று அரசியல் நாகரிகம் மிளிர ஒரு மாநாடு போலவே நடந்தது.

ஆனால், திருமணம் முடிந்து 5 மாதங்களிலேயே நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் பட்ட சித்ரவதைகளுக்கு அந்தநேரத்தில் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்ததைப்பார்த்த 'தினத்தந்தி' செய்தியாளரே சாட்சி. இப்படி மலர் பாதைகள் மட்டுமல்ல, கால்களையும், உடலையும் கிழிக்கும் முள் பாதைகளில் நடந்துதான் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்-அமைச்சர், இப்போது முதல்-அமைச்சர் என்று ஆட்சியிலும், பகுதி பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், இளைஞரணி செயலாளர், கழக துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என வளர்ந்து, இப்போது தி.மு.க. தலைவர் என்று கட்சியிலும் படிப்படியாக பல படிகளில் ஏறித்தான் உயர்ந்திருக்கிறார்.

முதல்-அமைச்சராக பல வியக்கத்தகு திட்டங்களை நிறைவேற்றி முத்திரை பதித்துள்ளார். ஆட்சி பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்பது உள்பட 5 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். நாள் தவறினாலும் அவர் புது அறிவிப்புகளை வெளியிடுவதில் தவறுவதில்லை. நேற்று கூட ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ் 7 புதிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இப்படி நாள்தோறும் மக்களுக்காக உழைத்து சாதனைகளை படைத்துவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளன்று தமிழ்த்தாயை வாழ்த்தும் பாடலான, "உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே" என தமிழக மக்கள் வாழ்த்துகிறார்கள்.


Next Story