50 லட்சம் கையெழுத்துகளை வாங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


50 லட்சம் கையெழுத்துகளை வாங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 21 Nov 2023 7:45 PM GMT (Updated: 21 Nov 2023 7:45 PM GMT)

‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு இனியும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் தீராத பிரச்சினை ஒன்று உண்டென்றால், அது 'நீட்' பிரச்சினைதான். 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து முதலில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும், பிற்காலங்களில் பிளஸ்-2 தேர்விலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே தகுதி காண் நுழைவு தேர்வு என்ற 'நீட்' தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்தும் முறை அமலுக்கு வந்தது.

முதல் ஆண்டில் இருந்தே, அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வும், "வேண்டாம்.. வேண்டாம்.. எங்கள் மாநிலத்துக்கு 'நீட்' தேர்வு வேண்டாம்" என்று எதிர்ப்பு குரல் எழுப்பின. ஜெயலலிதா எடுத்த முயற்சிகளால், முதல் ஆண்டு மட்டும் 'நீட்' தேர்வு இல்லாமல் பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்தது. ஆனால் அடுத்த ஆண்டு, அதாவது 2017-ம் ஆண்டு முதல் 'நீட்' தேர்வு தமிழ்நாட்டில் காலூன்றிவிட்டது. இதனால் தமிழக மாணவர்களுக்கு, அதிலும் குறிப்பாக ஏழை - எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி அனுமதி என்பது எட்டாக்கனியாகிவிட்டது. வசதி படைத்தவர்கள் மட்டும் பயிற்சி மையங்களில் படித்து, மருத்துவ கல்லூரிகளில் படிக்க சென்று விடுகிறார்கள்.

இந்தக் குறையைப் போக்க அரசு பள்ளிக்கூடங்களில் இப்போது ''நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. 'நீட்' தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற அ.தி.மு.க ஆட்சியில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை மத்திய அரசாங்கம் ஏற்கவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த முயற்சி வேகம் எடுத்தது. இதற்காக சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, அதை கவர்னருக்கு அனுப்பிய நேரத்தில், அவர் திருப்பி அனுப்ப மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. இப்போது அந்த மசோதா, மத்திய அரசாங்க உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கிறது.

'நீட்' விலக்கு மசோதாவுக்கு இனியும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நேரில் வலியுறுத்தியுள்ளார். 'நீட்' தேர்வு காரணமாக இதுவரை 23 மாணவர்கள் தற்கொலை செய்த நிலையில், இனியும் பொறுத்து இருக்க முடியாது, சட்ட வழிகளையும் பார்த்துவிட்டோம், சட்டமன்றம் மூலமாகவும் பார்த்துவிட்டோம், இனி மக்கள் மன்றம் மூலமாக முயற்சி எடுப்போம் என்ற வகையில், தி.மு.க.வின் இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி மூலமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "நீட் விலக்கு-நம் இலக்கு" என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து என்ற இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தைப்போட்டு தொடங்கிவைத்துள்ளார்.

இந்த கையெழுத்து இயக்கம் இப்போது மக்கள் இயக்கமாக மாறிவிட்டது. தபால் கார்டு மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்து போட்டு வருகிறார்கள். இந்த முயற்சி எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுக்குரியவர். சட்டமன்றத்தின் கோரிக்கையைத்தான் ஏற்கவில்லை, தமிழக மக்கள் மன்றத்தின் கோரிக்கையாவது ஏற்று, 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசாங்கம் விலக்கு கொடுக்கவேண்டும். தமிழக மாணவர்களுக்கு நல்வழி காட்டவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.


Next Story