பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
தாக்குதலை நிறுத்த இந்தியா முன்வந்தால் நாங்களும் தயார்.. பின்வாங்கும் பாகிஸ்தான்
தாக்குதலை நிறுத்த இந்தியா முன்வந்தால் நாங்களும் தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், “பாகிஸ்தான் எந்த விரோதப் போக்கையும் தொடங்காது, ஆனால் தாக்குதலை தொடர்ந்தால் பதிலடி கொடுப்போம். கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இருப்பினும், நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் ரத்து
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 21 பயங்கரவாத முகாம்களில் 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது நார்வே, குரோஷியா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளின் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்த பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த நார்வே, குரோஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.
பயங்கரவாத முகாம்களை அழிக்க பயன்படுத்தப்பட்ட ரபேல்
ஆபரேஷன் சிந்தூர்-ல் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ரபேல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரபேல் விமானங்களில் SCALP மிசைல்கள் மற்றும் AASM Hammer பம்புகள் பொருத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உயர் துல்லியமான ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்களை அது துல்லியமாக குறிவைத்து தாக்கின.
SCALP ஏவுகணை - 5.1 மீட்டர் நீளம், 1,300 கிலோ எடை, வெடிக்கும் பகுதியின் எடை 450 கிலோ ஆகும்.
250 முதல் 560 கி.மீ வரை சென்று SCALP ஏவுகணை துல்லியமாக தாக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்: பரபரப்பு வீடியோவை வெளியிட்ட ராணுவம்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 21 பயங்கரவாத முகாம்களில் 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது - வெளியுறவுத் துறை செயலாளர்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “பயங்கரவாத நடவடிக்கைகளை எங்கள் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றைத் தடுத்து நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர்: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.
நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக, சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
போர் பதற்றம் எதிரொலி.. 9 விமான நிலையங்கள் வரும் 10 ஆம் தேதி காலை வரை மூடல்
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் போர் பதற்றம் எதிரொலியாக ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஞ்ச், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் ஆகிய 9 விமான நிலையங்கள் வரும் 10 ஆம் தேதி காலை 5:30 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
25 நிமிடங்கள் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ - கர்னல் சோபியா குரேஷி
வெறும் 25 நிமிடங்களில், பாகிஸ்தானின் பல பெரிய பயங்கரவாத தளங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்து, பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
ஆபரேஷன் சிந்தூர் நேற்று நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 தீவிரவாத முகாம்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலேயே இந்த முகாம்கள் கண்டறியப்பட்டது.
மேற்கண்ட தகவல்களை கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பயங்கரவாத முகாம்களின் வரைபடம்
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பயங்கரவாத முகாம்கள் செயல்படும் இடங்களின் வரைபடத்தை அவர் வெளியிட்டார்.
போரை தூண்டும் வகையில் இந்த தாக்குதலை நடத்தவில்லை - ராணுவ பெண் அதிகாரிகள் விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக கர்னல் சோபியா குரேஷி அளித்த விளக்கத்தில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதில் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோர் பயிற்சி பெற்ற முரிட்கேவும் அடங்கும். எந்த பாகிஸ்தான் இராணுவ நிலையையும் குறிவைக்கவில்லை, இதுவரை பாகிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டது ஹிஸ்புல் முஜாஹிதீனின் மிகப்பெரிய முகாம்களில் ஒன்றாகும். இது கதுவா, ஜம்மு பகுதியில் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கான கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றாகும். பதான்கோட் விமானப்படை தள முகாம் மீதான தாக்குதலை இந்த முகாம் திட்டமிட்டு இயக்கியது” என்று கூறினார்.
இதனிடையே கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடையே உரையாற்றும் போது, பாகிஸ்தானுக்குள் 12-18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சியால்கோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா முகாம் உட்பட அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களைக் காட்டும் வீடியோக்களை வெளியிட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன... பொதுமக்களின் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும், பொதுமக்கள் உயிர் இழப்பதையும் தவிர்க்க இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன” என்று கூறுகினார்.