பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

Update:2025-05-07 06:43 IST
Live Updates - Page 6
2025-05-07 02:27 GMT

 “ஆபரேஷன் சிந்தூர்” - இந்தியாவின் தாக்குதலுக்கு ஓவைசி ஆதரவு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) இந்தியாவின் "இலக்கு வைக்கப்பட்ட மற்றும் துல்லியமான" ராணுவத் தாக்குதல்களை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஓவைசி பாராட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது நமது ஆயுதப்படைகள் நடத்திய இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நான் வரவேற்கிறேன். பாகிஸ்தானின் ஆழமான அரசுக்கு இன்னொரு பஹல்காம் இல்லாத அளவுக்கு கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பு முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். ஜெய் ஹிந்த்.. #ஆபரேஷன் சிந்தூர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-05-07 02:13 GMT

பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி... பிரதமர் மோடிக்கு சூஃபி கவுன்சில் தலைவர் நன்றி

அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சிலின் தலைவர் சையத் நசெருதீன் சிஷ்டி , இன்று நடந்த ஆபரேஷன் சிந்தூரை பாராட்டினார், மேலும் இது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலிமையையும், உறுதியையும் பிரதிபலிக்கும் ஒரு தீர்க்கமான தருணம் என்றும் கூறினார்.

இதுதொடர்பாக அவர் ஏ.என்.ஐ. செய்தியாளரிடம் கூறுகையில், “இன்று, இந்தியா தனது வலிமையைக் காட்டியுள்ளது. அனைத்து ராணுவ வீரர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன், மேலும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறுகிறேன்... நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட பிரதமருக்கு நான் நன்றி கூறுகிறேன்.

மேலும் அவர் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம். திருமணமான பெண்கள் அதைப் பயன்படுத்துவதால், சிந்தூருக்கு நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு இடம் உண்டு, ஆனால் பஹல்காமில், அவர்களில் பலர் அதை இழந்துவிட்டனர், இன்று, ஆபரேஷன் சிந்தூர் மூலம் அதற்கு பழிவாங்கிவிட்டோம்” என்று சையத் நசெருதீன் சிஷ்டி தெரிவித்தார்

2025-05-07 02:04 GMT

 “ஆபரேஷன் சிந்தூர்” - எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது - வெளியான முக்கிய தகவல்

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், ஆயுதப்படைகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) முழுவதும் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின.

மிக முக்கியமான இலக்குகளில் ஒன்று பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் ஆகும். மற்றொரு பெரிய தாக்குதல் சம்பாவுக்கு எதிரே உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கேவைத் தாக்கியது.

தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள்:

சாக் அம்ரூ, முரிட்கே, கோட்லி, சியால்கோட், குல்பூர், பாக், முசாபெராபாத், பிம்பர், பஹவல்பூர்


2025-05-07 01:56 GMT

“ஆபரேஷன் சிந்தூர்” - பிரதமர் மோடிக்கு நன்றி - பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மனைவி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சுபம் திவேதியின் மனைவி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) ராணுவத் தாக்குதல்களை நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். மேலும் அவர் (பாகிஸ்தானுக்கு) பதிலளித்த விதம், அவர் எங்கள் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இது என் கணவருக்கு ஒரு உண்மையான அஞ்சலி. என் கணவர் எங்கிருந்தாலும், இன்று அவர் நிம்மதியாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

2025-05-07 01:49 GMT

“ஆபரேஷன் சிந்தூர்” - ஜம்முகாஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்

பயங்கரவாத நிலைகள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்தநிலையில், ஜம்முகாஷ்மீர் மக்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

“இந்திய ராணுவம் ஜிந்தாபாத், பாரத் மாதா கி ஜெய்” என பொதுமக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

2025-05-07 01:44 GMT

“ஆபரேசன் சிந்தூர்” - தாக்குதலுக்குப் பிறகு முப்படைத் தலைவர்களுடன் பேசிய ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத்துறை மந்திரி முப்படைத் தலைவர்களுடன் பேசி உள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமதுவின் கோட்டையான பஹாவல்பூர் உட்பட 9 பயங்கரவாத இலக்குகள் மீது "இலக்கு வைக்கப்பட்ட மற்றும் துல்லியமான" ஏவுகணைத் தாக்குதலான "ஆபரேஷன் சிந்தூர்" நள்ளிரவு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்களுடன் பேசினார்.

2025-05-07 01:40 GMT

ஜம்முவின் 5 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடல்

நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதான்கோட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 72 மணி நேரம் மூடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

2025-05-07 01:35 GMT

காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து வடமாநிலங்களுக்கான விமான சேவை பாதிப்பு

காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து வடமாநிலங்களுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தரம்சாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


2025-05-07 01:26 GMT

பிரதமர் மோடி தலைமையில் காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி இருந்தது. அதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது

இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "#பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று காலை மத்திய அரசு அல்லது பாதுகாப்புப்படை தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ். ரஷியாவிடம் இந்தியா விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

உளவுத்துறை கொடுத்த துல்லிய தகவலின் பெயரில் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. இதில் லஷ்கர்-இ-தொய்பா. ஜெய்ஸ்-இ-முகம்மது தலைமையகங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும், மசூத் ஆசாரின் மதரசா அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் லாகூரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் அஹமது ஷரீஃப், இந்திய விமானப்படை சேர்ந்த எந்த விமானமும் பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழையவில்லை என்றும் ஏவுகணைகளை வைத்து இந்தியா தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் காலை 11 மணிக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது

இதற்கிடையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மே 06-07 அன்று இரவு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்