தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்
அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட திருத்தம் சமூக நீதிக்கு ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட திருத்தம் "சமூக நீதிக்கு" ஆபத்தானது. இந்த சட்ட திருத்தத்தை தமிழக அரசு முழுமையாக திரும்பப் பெறவேண்டும்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகின்ற சட்ட திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருத்துக்களின் அடிப்படையில் தற்போது சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டு மறுஆய்வு செய்யப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த சட்ட திருத்தத்தால் தமிழகத்தை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பிரிவினைச் சார்ந்த மாணவர்கள் உயர்கல்வி தொடரும் உரிமை பாதிப்புக்கு உள்ளாகும்.
தமிழ்நாடு தான் இந்திய அளவில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ளது என்பது கடந்த கால அகில இந்திய உயர்கல்வி ஆய்வின்படி தெரிய வருகிறது. சாதாரண ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் தமிழ்நாடு அரசு நேரடியாக நடத்துகின்ற அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டின்படி சேர்ந்து கல்வியை தொடர்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் சிறப்பான செயல்பாடும், மிக குறைந்த கல்வி கட்டணமும் இதற்கு காரணமாகும்.
தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்கி வரும் பல அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தவிர்த்து 161 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது அரசு அங்கீகரித்த மாணவர்கள் எண்ணிக்கையில் 10 சதவீதம் கல்லூரி நிர்வாகமும் மீதமுள்ள 90 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை அனுமதிக்கப்படுகிறது. இதனால் பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் முழுமையாக பயன் அடைந்து எளிமையாக உயர்கல்வியை இட ஒதுக்கீட்டின்படி தொடர்கின்றனர்.
தற்போது திருத்தப்பட்ட தனியார் பல்கலைக்கழக சட்டத்தின்படி அரசு உதவி பெறும் கல்லூரிகளாக இருக்கின்ற கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டால் இட ஒதுக்கீட்டினால் பயனடையும் மாணவர்கள் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள்.
தனியார் பல்கலைகழகங்களில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு நடைமுறைக்கும் தற்போது அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இட ஒதுக்கீடு நடைமுறை சதவீதத்திற்கும் கட்டாயம் பாதிப்பு ஏற்பட்டு இட ஒதுக்கீட்டின்படி கல்லூரி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். தனியார் பல்கலைக்கழகங்களில் மொத்த சேர்க்கை இடத்தில் 35 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீட்டின்படி வழங்கப்படும். இதனால் இட ஒதுக்கீட்டின் மூலம் கல்லூரியில் சேரும் 55 சதவீதம் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் தனியார் பல்கலைகழகமாக மாற்றப்பட்டால் கல்லூரி கல்வி கட்டணம் பல மடங்கு உயர்த்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் எளிய கட்டண தொகையை செலுத்தி இதுவரை பயின்று வந்த உயர்கல்வி ஏழை, எளியவர்களுக்கு எட்டா கனியாக அமையும். தனியார் பல்கலைக்கழகங்கள் என்று வந்துவிட்டால் மாணவர்களுக்கு அரசு மூலம் கிடைக்கின்ற உதவி தொகைகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.
அரசு உதவி பெறும் கல்லூரியில் பணி புரிகின்ற பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாநில அரசு ஊதியம் வழங்கி வருகிறது. அரசு உதவி பெறும் கல்லூரிகள் இந்தச் சட்டத்தின் மூலம் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டால் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் அரசின் மூலம் வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை. தனியார் பல்கலைக்கழகங்கள் நிதி உதவியும் கோர முடியாது. அதற்கு அவர்களுக்கு உரிமையும் கிடையாது. அரசு உதவி பெறும் கல்லூரிகளாக இருக்கும் வரை தான் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளுக்கு உத்தரவாதம் உள்ளது. தனியார் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டால் அந்த உத்தரவாதம் இல்லை. இதனால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அரசு உதவி பெறும் கல்லூரிகள் புதிய சட்டத் திருத்தத்தின்படி தனியார் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் என்பதோடு உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் தற்போது தமிழ்நாடு வகித்து வரும் முதலிடத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு பின்னுக்கு செல்லும். எனவே தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்தத்தை திரும்பப் பெறப்பட்டு மறு ஆய்வு செய்யப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ள உயர்கல்வித்துறை உடனடியாக இந்த சட்ட மசோதாவை மறுஆய்வுக்கு உட்படுத்தாமல் முழுமையாக திரும்பப்பெற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.