இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-05-14 09:08 IST


Live Updates
2025-05-14 14:37 GMT

வேலூர் குடியாத்தத்தில் புகழ் பெற்ற கங்கை அம்மன் கோவில் தேர் சரிந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. அந்த தேர் சாலையோர கால்வாயில் சரிந்து நிற்கிறது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேரை வெளியே கொண்டு வரும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

2025-05-14 13:46 GMT

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதனால், காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் செல்போன்கள், உடைமைகள் வைக்கும் நவீன தானியங்கி லாக்கர் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

2025-05-14 13:29 GMT

சென்னை எழும்பூரில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி தமிழக பா.ஜ.க. சார்பில் பேரணி நடந்தது. தேசிய கொடியை ஏந்தி திரளான பா.ஜ.க.வினர் பங்கேற்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சார்பில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த பேரணி நடைபெற்றது.

2025-05-14 12:58 GMT

சேலத்தில், தமிழக முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் (வயது 90), வயது மூப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

2025-05-14 12:41 GMT

வைகை ஆற்றில் கள்ளழகர் மீண்டும் எழுந்தருளினார். மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடந்தது.

இதில், ராஜ அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் கள்ளழகர் பவனி வந்தபோது, கள்ளழகரை தரிசிக்க பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

2025-05-14 12:34 GMT

கேரள விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன என சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 3 பெண்களிடம் சோதனை செய்ததில், 34 கிலோ உயர் ரக கஞ்சா, சாக்லேட்டுகளில் கலந்த 15 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.40 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, அந்த 3 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சுங்க துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

2025-05-14 11:48 GMT

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம், அரசுக்கு வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக சட்ட பிரிவுகள் உள்ளன என்றும், இதனை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது. தொடர்ந்து, வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

2025-05-14 11:41 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அரசு பஸ்சின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

2025-05-14 09:38 GMT

உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டத்துக்குப் பிறகு அரவான் களபலி நடைபெற்றது. திருநங்கைகள் வெள்ளை புடவை உடுத்தி, சோகத்துடன் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

2025-05-14 08:56 GMT

பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி உருவான பின்னர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பிற்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் இன்று பதிலளித்து பேசினார். சென்னை மயிலாப்பூரில் அவர் அளித்த பேட்டியின்போது, எங்களை தவிர்க்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது பற்றி ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுபற்றி நாளை அவர் அறிவிப்பார் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்