அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது: ஐகோர்ட்டு வேதனை
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக, வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
60 சதவிகிதம் நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25 சதவிகிதம் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளிலும் செலவிடப்படுகிறது. வெறும் 7 சதவிகிதம் நேரம் மட்டுமே பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நிலை உள்ளது என்றும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது எனவும் நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
ரூ.2.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல்
ஆந்திராவின் ஸ்ரீ காளஹஸ்தி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிரடிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில், ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கையெழுத்தானது ரபேல் போர் விமான ஒப்பந்தம்
ரூ.63,000 கோடி மதிப்பிட்டில் புதிதாக 26 ரபேல் மரைன் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ்குமார் சிங் மற்றும் பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் இடையே கையெழுத்தாகியுள்ளது. புதிய ரபேல் மரைன் போர் விமானங்கள், இந்திய கப்பற்படையின் ஐ.என்.எஸ். விக்ராந்த் விமான கப்பலில் இடம்பெற உள்ளது
ராணுவத்தில் இருந்து வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்
இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 நாட்களில் 1,200 பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சினைகள் காரணமாக ராஜினாமா எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ. 1.5 கோடி நிதி பெற்றது தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவின் மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நான் எப்படி மன்னிப்பு கேட்பேன்: உமர் அப்துல்லா உருக்கம்
காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா பேசியதாவது:-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் நான் எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை. நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறினார்.
கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் பாகாலா பகுதியில், சாலையில் முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த கார் மோதியதில், காரில் பயணித்த 5 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இறந்த 5 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷியாவுக்காக போரிட படைகளை அனுப்பினோம்.. வட கொரியா
உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது. அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாக போரிடுவதற்கு துருப்புகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதி செய்துள்ளது. குர்ஸ்க் பகுதியில் உக்ரைனின் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ரஷிய பிரதேசத்தை திரும்ப பெறுவதற்கான தாக்குதலில் வட கொரிய படைகள் பங்களிப்பை வழங்கியதாகவும் கூறி உள்ளது.
இதுபற்றி வட கொரியாவின் அதிகாரப்பூர்வமான மத்திய செய்தி நிறுவனத்திற்கு ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய ராணுவ ஆணையம் இன்று செய்தி அனுப்பி உள்ளது. அதில், ரஷியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஷிய படைகளுடன் சேர்ந்து போரிடுவதற்காக துருப்புக்களை நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.
வட கொரியா இவ்வாறு உறுதி செய்ததைத் தொடர்ந்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய தலைவர் கிம்மிற்கு தனிப்பட்ட முறையில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். தனது நாட்டின் கொரிய நண்பர்கள் ஒற்றுமை, நீதி மற்றும் தோழமை உணர்வுடன் செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.
அவமான ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி - மு.க.ஸ்டாலின் சாடல்
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திமுக ஆட்சியில் எந்த வழக்காக இருந்தாலும் விரைந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறப்பான ஆட்சியை எதிர்க்கட்சி தலைவர் குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை. கடந்த 4 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளன.
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி; அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. சாமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு சாத்தான்குளமே சாட்சி; துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி; ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள தமிழகத்தின் உரிமைகளை அடகுவைத்த ஆட்சி அதிமுக. சட்டம்-ஒழுங்கை பற்றி பேச அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்துவைத்தது
அமைச்சர் பதவி விலகல் தொடர்பான கவர்னர் மாளிகையின் செய்திக்குறிப்பை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. அந்த வகையில், புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை என்று நீதிபதிகள் கூறினர்.
வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் எந்த அரசுப் பதவியும் ஏற்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகலாம். அதற்காக, எந்த பதவியும் வகிக்க முடியாது என உத்தரவிட முடியாது என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.