குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு முயன்ற 3 பயங்கரவாதிகள் கைது

குஜராத் போலீசாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்குள்ள காந்திநகர் மாவட்டத்தின் அடாலஜ் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
ஆமதாபாத்,
குஜராத் போலீசாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்குள்ள காந்திநகர் மாவட்டத்தின் அடாலஜ் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது அகமது மொகியுத்தின் சையத் என்பவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவருக்கு ஆயுதங்களை வழங்கிய ஆசாத் சுலைமான் ஷேக், முகமது சுகைல் சலீம் ஆகிய 2 பேரை பனஸ்கந்தா மாவட்டத்தில் வைத்து போலீசார் மடக்கினர். கைது செய்யப்பட்ட சையத் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஆவார். ஆசாத், சலீம் இருவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அந்தவகையில் கைதான சையத் சீனாவில் எம்.பி.பி.எஸ். படித்தவர். ரிசின் எனப்படும் கொடூரமான ரசாயன விஷம் தயாரிப்பதில் கைதேர்ந்த இவர், அதன் மூலம் பெரும் பயங்கரவாத சதியை அரங்கேற்ற திட்டமிட்டு உள்ளார். இதற்காக லக்னோ, டெல்லி, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களையும் இவர்கள் நோட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும் இதற்காக நிதி மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் இவர்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த அபு கதிஜா என்ற பயங்கரவாதியின் வழிகாட்டலில் சையத் இயங்கி வந்துள்ளார். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த பலருடனும் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களுக்கான ஆயுதங்கள் பாகிஸ்தான் எல்லை வழியாக டிரோன் மூலம் கிடைத்துள்ளன. மேலும் ராஜஸ்தானில் இருந்தும் ஆயுதங்களை பெற்று உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்து 3 செல்போன்கள், 2 லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 3 பேரை கைது செய்ததால் மிகப்பெரிய பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர். அவர்கள் மீது உபா உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.






