ஈரான் நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி


ஈரான் நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி
x

`ஆபரேஷன் சிந்து' மூலம் ஈரானில் இருக்கும் 1,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் இருப்பதாக குற்றம் சாட்டி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் களத்தில் இறங்கியது.ஏவுகணை, டிரோன் என பலவகை தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே இன்று 8-வது நாளாக போர் நீடித்து வருகிறது.

இந்த போர்ச்சூழலில் இரு நாடுகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த நாடுகளுக்கு படிப்புக்காகவும், வேலைக்காகவும் சென்ற பல்வேறு நாட்டினரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் அவர்களை பத்திரமாக மீட்டு வர அனைத்து நாடுகளும் அக்கறை காட்டி வருகின்றன.இதன்படி இந்திய அரசு, ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்களின் மீது முதல் கவனம் செலுத்தியது. அங்குள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாட்டு அறையை ஈரான் வடக்கு பகுதியில் உள்ள உர்மியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் முதன்முதலாக தொடர்பு கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அந்த மாணவர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கியது. இதன்படி ஈரான் நாட்டின் அருகில் உள்ள அர்மேனியா நாட்டுக்கு அந்த மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதற்கு துர்க்மெனிஸ்தான் நாடும் உதவியுள்ளது.இப்படி 110 மாணவர்கள் முதல்கட்டமாக அர்மேனியா அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு எரேவன் என்ற இடத்தில் உள்ள ஸ்வார்நாட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஏற்றப்பட்டனர்.

இந்த விமானம் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு காலை 6.30 மணி அளவில் டெல்லியில் வந்து இறங்கியது. இந்த குழுவில் 94 பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில், ஈரானில் இருந்து அடுத்த கட்டமாக 1000 இந்திய மாணவர்கள் வெளியேற வான்வெளியை ஈரான் அரசு திறந்து விட்டுள்ளது. ஈரான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் ஏர்வேஸ் 3 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.இவர்கள் அனைவரும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தாத நகரமான மஸ்சாத் வழியாக பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. முதல் விமானத்தின் மூலம் மாணவர்களில் ஒரு பகுதியினர் தலைநகர் டெல்லி அழைத்து வரப்படுவார்கள். எஞ்சியவர்களும் பகுதி, பகுதியாக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் வான்பரப்பு மூடப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வான்வெளியை திறந்துள்ளது. இந்திய சிறப்பு விமானங்கள் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story