சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்

10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான முகப்பில் உள்ள துவார பாலகர் சாமி சிலை மற்றும் கோவில் கதவுகளில் தங்க கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இந்த கவசங்களை புதுப்பிக்கும் பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு கோவிலை விட்டு வெளியே கொண்டு சென்ற போது சுமார் 100 பவுன் தங்கம் அபகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் தற்போது வெளியாகி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள், இடைத்தரகராக செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு உத்தரவில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையை 6 வாரங்களுக்குள் முடிக்கவும், 2 வாரங்களில் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்யவும் கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சிறப்பு விசாரணைக்குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வுக்குழு இன்று கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. நீதிபதிகள் விஜயராகவன், விஜயகுமார் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இன்றி தனி அறையில் வீடியோ பதிவுகளுடன் நீதிபதிகள் முன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.






