பெங்களூரு ஏடிஎம் வாகன கொள்ளை சம்பவம்: 3 பேர் கைது - ரூ. 5.76 கோடி பறிமுதல்

வாகனத்தில் இருந்த ரூ. 7.11 கோடி பணத்தை கடத்தி சென்றனர்
பெங்களூரு ஏடிஎம் வாகன கொள்ளை சம்பவம்: 3 பேர் கைது - ரூ. 5.76 கோடி பறிமுதல்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜேபி நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப ரூ. 7.11 கோடி பணத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவன வானத்தில் கடந்த 19ம் தேதி ஊழியர்கள் சென்றனர். அந்த வாகனத்தில் டிரைவர், துப்பாக்கியுடன் கூடிய 2 பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் பயணித்தனர்.

இதனிடையே, ஜெயநகர் அருகே அசோக் பில்லர் பகுதியில் சென்றபோது அந்த வாகனத்தை சொகுசு காரில் வந்த சிலர் இடைமறித்தனர். ரிசர்வ் வங்கி, மத்திய அரசு அதிகாரிகள் என கூறிக்கொண்ட அவர்கள் பணத்தை சோதனை செய்ய வேண்டும் என கூறி வாகனத்தை கடத்தி சென்றனர். பின்னர், அந்த வாகனத்தில் இருந்த ரூ. 7.11 கோடி பணத்தை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏடிஎம் வாகனத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், ஏடிஎம் வாகன கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ. 5.70 கோடி மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக போலீஸ் கான்ஸ்டபிள் அன்னப்ப நாயக், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவியர், பணத்தை எடுத்துசெல்லும் வாகனத்திற்கான பொறுப்பாளர் கோபால் பிரசாத் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ள நிலையில் அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். அதேவேளை, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 30 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com