மாநில அந்தஸ்து பெற காங்கிரஸ், தி.மு.க. செய்தது என்ன?


மாநில அந்தஸ்து பெற காங்கிரஸ், தி.மு.க. செய்தது என்ன?
x

புதுவைக்கு மாநில அந்தஸ்துபெற ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ், தி.மு.க. செய்தது என்ன? என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி

புதுவைக்கு மாநில அந்தஸ்துபெற ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ், தி.மு.க. செய்தது என்ன? என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

கவர்னர் ஆய்வு

புதுவை அரசு ஆஸ்பத்திரி நரம்பியல் துறையில் புதிதாக 'கரோட்டிட் டாப்லர்' ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருவியை இன்று காலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.

அப்போது சுகாதாரத்துறை செயலாளர் பங்கஜ்குமார் ஜா, இயக்குனர் ஸ்ரீராமுலு, அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு கவர்னர் வந்தார். அங்கு சீட்டுபதிவு செய்ய வரிசையில் நின்ற பெண்களை சந்தித்து ஆதார் அட்டை கொண்டு வந்தீர்களா? என்று கேட்டார். ஆதார் கொண்டு வந்து சீட்டு பதிவு செய்தால் அவர்களது நோய், சிகிச்சை குறித்து பதிவு செய்யப்படும். அவ்வாறு செய்தால் அடுத்தமுறை சிகிச்சைக்கு வரும்போது டாக்டர் அதை அறிந்துகொண்டு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அதன்பின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தொடர் முயற்சி

புதுவை மாநிலம் எல்லா வகையிலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நர்சுகளின் கோரிக்கையான ஓய்வு அறை, இரவுநேர பணிகளுக்கான கட்டுப்பாடுகள், பணிநியமனம் குறித்து அவர்களுடன் பேசியுள்ளேன். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.

ஆதார் அடையாள எண்ணைக்கொண்டு நோயாளிகளின் தகவல்களை சேமிக்கும் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனை பதிவு செய்தால் ஆபா என்ற அடையாள எண் வழங்கப்படும். அதன்மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான நடவடிக்கைகள் எளிமையானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

10 சதவீத இடஒதுக்கீடு

அவரிடம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, மாநில அந்தஸ்து, நீட் தேர்வு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

புதுவை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு சில தகவல்களை கேட்டுள்ளது. அதனை நாங்கள் கொடுத்துள்ளோம். இதனால் மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போகாது. இதில் யாரையும் குற்றம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த ஆண்டே இடஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்பது தேவையானது. சீட் கிடைக்கவில்லை என்பதற்காக யாரும் தற்கொலை முடிவுக்கு வரக்கூடாது. நீட் தேர்வு என்பது ஒரு நல்ல திட்டம். ஆனால் அது தவறாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.

இவர்கள் என்ன செய்தார்கள்?

மாநில அந்தஸ்து தொடர்பான கோப்பு எனக்கு வந்த மறுநாளே நான் கையெழுத்திட்டு அனுப்பிவிட்டேன். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய மந்திரியாக இருந்தார். மத்தியிலும் மாநிலத்திலும் அவர்களது ஆட்சி (காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி) இருந்தது. அப்போது ஏன் மாநில அந்தஸ்து வழங்கவில்லை. அப்போது இவர்கள் என்ன செய்தார்கள்?

புதுவையில் அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்கவேண்டும் என்று விருந்துக்கு அழைத்தேன். ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விமர்சிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story