தமிழ்நாட்டில் இருந்து 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்


தமிழ்நாட்டில் இருந்து 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்
x

பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த 27-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த கால அவகாசத்துக்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? என்பதை அந்தந்த மாநில அரசுகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவுறுத்தல்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் பெயர், விவரங்களை குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுத்து வெளியேற்றும் பணியை தொடங்கினார்கள்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சென்னையில் 20 பாகிஸ்தானியர்கள் தங்கி இருந்தனர். இதில் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த 2 பாகிஸ்தானியர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே போன்று வேலூரில் உள்ள பிரபல ஆஸ்பத்திரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள சில ஆஸ்பத்திரிகளில் பாகிஸ்தானியர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணியை குடியுரிமை அதிகாரிகள் உளவுப்பிரிவு போலீசார் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர். எத்தனை பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற உறுதியான தகவல்கள் கசிய விடக்கூடாது என்று உளவுப்பிரிவு போலீசாருக்கு மத்திய அரசு தரப்பில் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவேதான் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை ரகசியமாக மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story