ஆதவ் அர்ஜுனா மனு - குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்

கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் வன்முறை தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த பதிவை அகற்றிவிட்டார். ஆனால், இந்த பதிவின் அடிப்படையில் அவர் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்துள்ளார். அதில், எக்ஸ் தளத்தில் போடப்பட்ட பதிவை உடனடியாக நீக்கி விட்டேன். அந்த பதிவு போட்டதில் எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. ஆனால், எனக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை முழுமையாக கவனிக்காமல், அவசர கதியில், எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த வழக்கை ரத்து செய்யவேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. இந்த விசாரணையில் மனுவை குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது. அதன்படி, வருகிற நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






