அ.தி‌.மு.க. - தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் - கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு


அ.தி‌.மு.க. - தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் - கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
x

ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலத்தை கட்டியது யார்? என்று மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றிச்செல்வன், ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் துடியலூரில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3.27 கோடியில் நவீன பஸ் நிலையம் அமைப்பது உள்பட 102 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. தூரம் ஜி.டி.நாயுடு பெயரில் உயர் மட்ட மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த 9-ந் தேதி திறந்து வைத்தார். இந்த பாலத்தை கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் இந்த பாலத்தை கொண்டு வந்த பெருமை அ.தி.மு.க.வை சேரும் என கோஷம் எழுப்பினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேம்பால பணி 5 முதல் 10 சதவீதம் மட்டுமே முடிவடைந்தது எனவும், இந்த திட்டத்தை முடக்காமல் மேற்கொண்டு 95 சதவீத பணியை முடித்து திறந்து வைத்தது தி.மு.க. ஆட்சி என்று பதில் அளித்தனர். இதனால் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி கோஷம் எழுப்பியதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

1 More update

Next Story