ரேஷன் கடையில் மூதாட்டி தவறவிட்ட 5 சவரன் நகையை ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு

கோவில்பட்டி பகுதியில் மூதாட்டி ஒருவர், ரேஷன் கடையில் பருப்பு, சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிய போது, நகைகள் வைத்திருந்த பையை அவர் தவறவிட்டுள்ளார்.
ரேஷன் கடையில் மூதாட்டி தவறவிட்ட 5 சவரன் நகையை ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜிவ்நகர் 6-வது தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி லட்சுமி (வயது 65). இவர் கடந்த 9ம் தேதி ஜோதிநகரில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது ஒரு தங்கச்சங்கிலி, 2 தங்க வளையல்கள் என மொத்தம் 5 சவரன் நகைகளை ஒரு பையில் போட்டு கையில் வைத்திருந்தார். ரேஷன் கடையில் பருப்பு, சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிய போது, நகைகள் வைத்திருந்த பையை தவறவிட்டுள்ளார்.

ரேஷன் கடையில் இருந்து வீட்டிற்கு சென்ற அவர் நகைகள் வைத்திருந்த பை தவறியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் நகைப்பை கிடைக்காததால், அவர் இதுகுறித்து நேற்று முன்தினம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீஸ் ஏட்டு கழுகாசலமூர்த்தி ரேஷன்கடைக்கு சென்று ஊழியரான நாகலாபுரம் சீனிபாண்டியனிடம்(55) விசாரித்தார். அப்போது அவர் கடந்த 9ம் தேதி மாலையில் கடையை அடைக்கும் போது மேஜைக்கு அடியில் கிடந்த பையை எடுத்து பார்த்தேன். அதில் நகைகள் இருந்ததை பார்த்து, தவறவிட்டவர்கள் தேடிவரும்போது கொடுக்கலாம் என கடையில் வைத்துள்ளேன் என தெரிவித்தார். தொடர்ந்து அந்த நகைப்பையை போலீஸ் ஏட்டுவிடம் ஒப்படைத்தார்.

பின்னர் மூதாட்டியையும், கடை ஊழியரையும் காவல் நிலயத்துக்கு வரவழைத்தனர். அங்கு மூதாட்டியிடம் நகைகளை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் முன்னிலையில் ரேஷன்கடை ஊழியர் ஒப்படைத்தார். கடையில் தவறவிட்ட நகைகளை மூதாட்டியிடம் நேர்மையாக ஒப்படைத்த ஊழியரை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com