மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு

மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.
சென்னை,
சென்னையில் 116.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.46 கிலோ மீட்டர் நீளத்திற்கும், பட்டாபிராம் முதல் கோயம்பேடு வரையில் 21.76 கிலோ மீட்டர் நீளத்திற்கும் மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் குழுவினர் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டங்களை பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்தனர். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகளான ஆண்ட்ரஸ் பிசாரோ, தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான நிபுணர் சந்தோஷ் ஆகியோர் மெட்ரோ ரெயில் மேம்பாட்டு பணிகள், விரிவாக்க திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அதன்படி, நேற்று முன்தினம் நீட்டிப்பு வழித்தடமான விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், பட்டாபிராம் முதல் கோயம்பேடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதேபோல, பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான 28 கிலோ மீட்டர் வழித்தடத்தை நேற்று பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன், இணை பொது மேலாளர் நரேந்திர குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






