இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்துவதாக, மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்துவதாக, தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் இன்று அதிகாலையில் தூத்துக்குடி நகர உட்கோட்டம் தாளமுத்துநகர், விவேகானந்தர் காலனி கடற்கரை பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர்.
அப்போது அந்த கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு லோடு வேன் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த லோடு வேனை கைப்பற்றி சோதனை செய்தபோது, அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 27 மூட்டை பீடி இலைகளும், சுமார் 30 கிலோ எடை கொண்ட 3 மூட்டை கட்டிங் பீடி இலைகளும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து லோடு வேன் மற்றும் 30 மூட்டைகள் பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினர். பிடிபட்டுள்ள பீடி இலை மூட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சமாகும். மேலும் இது தொடர்பாக லோடு வேன் ஓட்டுநரான தாளமுத்துநகர், டேவிஸ்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் உமா விஜயகுமார் (வயது 23) என்பவரை கைது செய்த கியூ பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.






