சமூக வலைதளங்களில் புகைப்படத்தை மாற்றிய பாஜக தலைவர்கள்... காரணம் என்ன...?

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை,
இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. (சரக்கு சேவை வரி) திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒரு பொருளுக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான வரி விதிக்கப்படுவதை கட்டுப்படுத்தி ஒரே வரியாக விதிக்கும் வகையில் இந்த திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 5, 12, 18, 28 சதவீதம் என 4 அடுக்குகளாக நடைமுறையில் இருந்தது.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி அடுக்குகள் 4-ல் இருந்து 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. வரி சீரமைப்பு மூலம் இனி 5, 18 சதவீதம் ஆகிய 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் மக்களுக்கு மத்திய அரசு தீபாவளி பரிசு வழங்குவதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்தார்.
இந்நிலையில் நவராத்திரி விழாவின் தொடக்க நாளான இன்று ஜி.எஸ்.டி. வரி திருத்தம் அமலுக்கு வந்தது. ஏற்கனவே 28 சதவீதம் வரி விதிப்பின் கீழ் இருந்த 99 சதவீத பொருட்கள் 18 சதவீதம் வரி விகிதத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளன. இதனால் வீட்டு உபயோக பொருட்கள் உள்பட 375 பொருட்களின் விலை கணிசமாக குறைந்து உள்ளது. நெய், பன்னீர், வெண்ணெய், ஜாம், உலர் பழங்கள், காபி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவு பொருட்களும் விலை குறைந்தன.
பெரும்பாலான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைந்துள்ளதால் அவற்றின் விலைகளும் கணிசமாக குறைந்துள்ளது. சிமெண்ட் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளதால் வீடு கட்டுவோர் பயன் அடைவார்கள். வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் புதிதாக வாகனம் வாங்குவோர் அதிக அளவில் பயன் அடைவார்கள்.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தங்களின் சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்றி உள்ளனர். அந்த புகைப்படத்தில் "ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒரு மிகப்பெரிய பரிசு, பிரதமர் மோடி அரசுக்கு நன்றி" என்ற வார்த்தை அடங்கியுள்ளது.






