காரை வழிமறித்து தாக்குதல்: பா.ம.க. இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு

சேலம் அருகே பா.ம.க. எம்.எல்.ஏ. காரை வழிமறித்து ஒரு கும்பல் தாக்கியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வடுகத்தம்பட்டியை சேர்ந்தவர் சத்யராஜ். பா.ம.க. ஒன்றிய செயலாளரான இவரது தந்தை நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இந்த துக்க வீட்டிற்கு அருள் எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகள் சிலருடன் நேற்று காரில் சென்றார். அங்கு துக்கம் விசாரித்து விட்டு அருள் எம்.எல்.ஏ. காரில் சேலம் நோக்கி புறப்பட்டார். அவருக்கு பின்னால் 3 கார்களில் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் வந்தனர்.
அப்போது வடுகத்தம்பட்டி பாலம் அருகே அருள் எம்.எல்.ஏ. வந்த காரை ஒரு கும்பல் வழிமறித்து திடீரென கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்னர், காரில் இருந்த எம்.எல்.ஏ. விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பாராத எம்.எல்.ஏ.வுடன் வந்த நிர்வாகிகள் பின்னால் வந்த கார்களில் இருந்து இறங்கி தட்டிக்கேட்டனர். இதில் அந்த கும்பலுக்கும், இவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கைக்கலப்பாக மாறியது. ஒருவரையொருவர் கட்டை மற்றும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விஜயகுமாருக்கு கையில் கத்தி வெட்டு விழுந்தது. இதேபோல் 10 நிர்வாகிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். இதற்கிடையே காயமடைந்த எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் 11 பேர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அருள் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், “துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய போது அன்புமணி தரப்பை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு கும்பல் எங்கள் காரை வழிமறித்து தாக்கியது. அப்போது அந்த கும்பல் என்னை பார்த்து கொலை செய்யும் நோக்கில் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டையால் தாக்க முயன்றது. அப்போது காரை டிரைவர் வேகமாக ஓட்டி வந்து விட்டார். எனது பின்னால் வந்த கார்களை வழிமறித்து அதில் வந்தவர்களை கடுமையாக தாக்கினர்” என்று கூறினார்.
ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், “சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் மற்றம் அவருடன் சென்ற கார்களை வழிமறித்த ஒரு கும்பல் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் ஜனநாயகத்துக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் சட்டத்தில் அவர்களை கைது செய்ய வேண்டும். எம்.எல்.ஏ. அருள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் சுதந்திரமாக மக்கள் பணி செய்வதற்கு ஏதுவாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
அருள் எம்.எல்.ஏ.வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - அன்புமணி தரப்பு
அன்புமணி ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் வடுகத்தம்பட்டியில் பா.ம.க. தொண்டர்களை சேலம் மேற்கு எம்.எல்.ஏ. அருள் தலைமையிலான கும்பல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதுடன், காரை மோதி படுகொலை செய்ய முயன்றுள்ளது. போலீசார் முன்னிலையிலேயே இந்த காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பாமக இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அருள் எம்.எல்.ஏ-வை தாக்கிய சம்பவத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர் மீது ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அன்புமணி ஆதரவாளர் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், ராமதாஸ் ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






