ராகுல்காந்தியின் முயற்சிக்கு வலிமை சேர்க்க அணி திரண்டு வாருங்கள் - செல்வப்பெருந்தகை அழைப்பு

கோப்புப்படம்
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர் அணிதிரண்டு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய தலைவர் ராகுல்காந்தி, 5 வகையான வாக்கு திருட்டுகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டினார். அதன்படி, போலி வாக்காளர்கள், போலி முகவரிகள், ஒரே முகவரியில் போலி வாக்காளர்கள், செல்லாத போலி புகைப்படங்கள், படிவம் 6 முறைகேடு எனக் கூறி அதற்குரிய ஆதாரங்களை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய பதிலை இன்று வரை தெரிவிக்கவில்லை.
முறைகேடுகளை அறிந்து கொள்வதற்கு வாக்காளர் பட்டியலை மின்னணு வடிவத்தில் கேட்டால் தேர்தல் ஆணையம் வழங்க மறுக்கிறது. அப்படி செய்தால் 30 வினாடிகளுக்குள் அவர்கள் செய்து வைத்திருக்கும் மோசடிகள் அம்பலப்பட்டு விடும் என்பதால் அதை வெளியிட மறுக்கின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடிகள் குறித்து மக்களிடையே தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிற வகையில் தமிழ்நாட்டில் மாநில அளவிலான மாநாடு, வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லையில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.
தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்துகிற முயற்சிகளுக்கு வலிமை சேர்க்கிற வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணிதிரண்டு வர வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






