கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது

கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே 2 வாலிபர்கள் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே 2 வாலிபர்கள் கடந்த 23ம் தேதி இரவு கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அவர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது அரிவாளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்த நிலையில், 2 பேரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் பாரதிநகர், அம்பேத்கர்தெரு நடுத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன் (வயது 19), பாரதிநகர் 2 ஆவது தெருவைச் சேர்ந்த குமார்(எ) ராம்குமார் மகன் வேல்முருகன்(18) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.






