திமுக எம்.எல்.ஏ. மறைவு: சேந்தமங்கலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா..?

தமிழ்நாடு சட்டசபைக்கு 234 இடங்கள் உள்ளன.
சென்னை,
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னுசாமி (வயது 74). நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். ஏற்கனவே மாரடைப்பால் அவதிப்பட்டு வந்த அவர் ஆஞ்சியோ சிகிச்சை எடுத்து உள்ளார். கொல்லிமலை எல்லைகிராய்பட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது பொன்னுசாமிக்கு நேற்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் ஆம்புலன்சில் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.30 மணி அளவில் அவர் இறந்தார். மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் கொல்லிமலை அடிவார பகுதியான நடுக்கோம்பை புளியங்காடு கிராமத்தில் உள்ள அவரது மகன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு நேற்று மாலை வந்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதேபோல் அமைச்சர்கள் எ.வ.வேலு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜேந்திரன், மதிவேந்தன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும், அரசு அதிகாரிகளும் மறைந்த எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இடைத்தேர்தல்:-
வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி (அ.தி.மு.க.) கடந்த ஜூன் மாதம் மரணம் அடைந்தார். அந்த தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பொதுவாக, ஒரு தொகுதி காலியாகிவிட்டால் அதில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் ஜூன் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டுக்கான சட்டசபை பொதுத்தேர்தலே 9 மாதங்களில் நடக்கும் சூழ்நிலை காணப்பட்டதால், வால்பாறை தொகுதிக்கான இடைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வராது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமி (தி.மு.க.) மரணமடைந்து விட்டார். இதுகுறித்த அறிவிப்பாணையை தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு சட்டசபை செயலகம் அனுப்பி வைக்கும். அது இந்திய தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்பட்டதும், சேந்தமங்கலம் தொகுதி காலியானதாக தேர்தல் கமிஷன் அறிவிக்கும். இன்னும் ஒரு வாரத்தில் இதற்கான அறிவிப்பாணையை எதிர்பார்க்கலாம்.
ஆனால் பொதுத்தேர்தல் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் நடைபெற இருப்பதால், சேந்தமங்கலம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தேர்தல் கமிஷன் வட்டாரம் தெரிவித்தது. தமிழ்நாடு சட்டசபைக்கு 234 இடங்கள் உள்ளன. அமுல் கந்தசாமி மற்றும் பொன்னுசாமி மறைவினால் 2 இடங்கள் காலியாகி, தற்போது 232 இடங்கள் உள்ளன. சட்டசபையில் தி.மு.க.வுக்கு தற்போது ஒரு இடம் குறைந்து 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அ.தி.மு.கவுக்கு 65 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.






