கனமழை எதிரொலி.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னையில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கனமழை எதிரொலி.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

அதேபோல, காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள், வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது மழையால் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். இதனிடையே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (02.12.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன், சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்  எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com