த.வெ.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையா? - செல்வப்பெருந்தகை கூறியது என்ன..?

த.வெ.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா? என்ற கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.
சென்னை,
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இப்போது இருந்தே தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.
பிரசாரம் ஒருபுறம் என்றால் திரை மறைவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரம் இது. ஒவ்வொரு கட்சியும் தாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் திரைமறைவில் எதிர்க்கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியும் திரைமறைவில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், காங்கிரஸ் மேலிடமும், தி.மு.க.வும் மிகவும் நெருக்கமாக இருப்பதுடன் அது ஒரு கொள்கை கூட்டணியாகவே இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகக் கூறி பீகார் மாநிலத்தில் ராகுல்காந்தி நடத்திய பிரசாரத்தில்கூட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், காங்கிஸ் - த.வெ.க. திரைமறைவு பேச்சுவார்த்தை குறித்து செல்வப்பெருந்தகையிடம் கேட்டதற்கு அவர், ‘‘தமிழக வெற்றிக் கழகத்துடன் திரைமறைவில் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. த.வெ.க.வில் இருந்து யாரும் எங்களிடம் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்’’ என்றார்.






