தவெகவில் இணைந்தார்: செங்கோட்டையனின் கோட்டையை தகர்க்க அதிமுக திட்டம்

செங்கோட்டையனின் நீண்ட அரசியல் அனுபவத்தால் தவெகவுக்கு புதிய பலம் சேர்ப்பார் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.
தவெகவில் இணைந்தார்: செங்கோட்டையனின் கோட்டையை தகர்க்க அதிமுக திட்டம்
Published on

சென்னை,

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டைன் விஜய் முன்னிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடன் முன்னாள் எம்.பி. சத்யபாமா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சாமிநாதன், அசனா ஆகியோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் த.வெ.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை விஜய் வழங்கினார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது நீண்ட அரசியல் அனுபவத்தால் த.வெ.க.வுக்கு புதிய பலம் சேர்ப்பார் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வகுத்த தந்த அனுபவம் அவருக்கு உண்டு.

கூட்டம் எப்படி நடத்த வேண்டும்; பிரசாரம் எப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போடுவதில் கெட்டிக்காரர். இத்தனை திறமை வாய்ந்த செங்கோட்டையன்தான், தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். இனி அவரது பணி, த.வெ.க.வுக்கு ராஜகுருவாக இருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இதற்கிடையில், செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றதால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு என்ற குரல்கள் அதிகளவில் எழுந்துள்ளன. ஆனால் ஆழமாக வேரூன்றி இருக்கும் கட்சிகளில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது கவலைப்படாது. தனது பாதையில் சென்று கொண்டே இருக்கும். அது தான் வரலாறு.

தி.மு.க.விலும், அ.தி.மு.க.விலும் இதுவரை எத்தனையோ பேர் வெளியேறி கட்சி தொடங்கி இருக்கிறார்கள். மாற்று கட்சிகளில் சேர்ந்து இருக்கிறார்கள். அதனால் அந்த கட்சிகளுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இருந்தாலும் அ.தி.மு.க.வை பொறுத்தவரை செங்கோட்டையன் கோட்டையை முழுமையாக தகர்க்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. அதற்காக கோபிசெட்டிபாளையத்தில் 30-ந் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படுகிறது. அதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டம் மூலம் செங்கோட்டையன் இல்லாவிட்டாலும், அ.தி.மு.க. அங்கு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதனை காட்ட அ.தி.மு.க. இந்த பணியினை மேற்கொண்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com