ஈரோட்டில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 25 நாட்களுக்கு பின்னர் மீட்பு

பல நாட்களுக்கு பின்னர் குழந்தையை பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க போலீசாரிடம் நன்றி தெரிவித்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சித்தோடு தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்திற்கு அடியில் ஆந்திர மாநிலம் மேலூரை சேர்ந்த வெங்கேஷ், கீர்த்தனா தம்பதியினர் தங்களது 5வயது மகன் மற்றும் 2 வயது பெண் குழந்தை வந்தனாவுடன் கடந்த 15ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர்கள் குழந்தை தூங்கி கொண்டிருந்த கொசுவலையை அறுத்துவிட்டு குழந்தையை கடத்தி சென்றனர். இது தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதனையடுத்து ஏடிஎஸ்பி தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் சம்பவ அதிகாலை 12 மணி முதல் 1 மணிவரை அவ்வழியாக சென்ற வாகனங்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடி கேமராக்களில் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஈரோட்டில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை இன்று (10.11.2025) சுமார் 25 நாட்களுக்கு பின்னர் நாமக்கல்லில் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை கடத்திய ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 25 நாட்களுக்கு பின்னர் குழந்தையை பார்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க போலீசாரிடம் நன்றி தெரிவித்தனர்.






