ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும்; ஜி.கே. மணி

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அடுத்ததாக நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் வெற்றி பெறுவதுடன், தனது பக்கம் தனிப்பெரும்பான்மையை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களைக் குறிவைத்து, அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அதேவேளை, சென்னை சொழிங்கநல்லூரில் தனது ஆதரவாளர்கள் மத்திய பேசிய அன்புமணி கட்சியில் இருந்து ராமதாசால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் அதே பொறுப்புகளில் நீடிப்பார்கள் என்றார்.
அதேவேளை, கடந்த 16-ம் தேதி முதல், டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறார். அதன்படி, நேற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை நேற்று திடீரென அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் சமாதானம் ஏற்படுத்த கட்சியினரும், குடும்பத்தினரும் முயற்சித்தனர். ஆனால், நேற்றைய சந்திப்பு தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தைலாபுரத்தில் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ம.க.வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சமாதானம் ஏற்படும். அதற்கான தொடக்கமாக இந்த சந்திப்பை பார்க்கலாம். பா.ம.க.வில் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என நம்புகிறோம்' என்றார்.






