எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் சந்திப்பு


தினத்தந்தி 23 Dec 2025 1:38 PM IST (Updated: 23 Dec 2025 2:12 PM IST)
t-max-icont-min-icon

பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக.

சென்னை,

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி நகர்வுகள், விருப்ப மனுக்கள் அளித்தல், பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கிவிட்டன. இதனால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். '

அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. கூட்டணியை பலப்படுத்துவது, தொகுதிப் பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பியூஷ் கோயல் பேசிவருகிறார்.



இந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோ உடனிருந்தனர். மேலும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை தேசிய கூட்டணிக்குள் கொண்டு வர பேசிவருவதாகவும், கடந்த காலங்களில் கூட்டணிகளில் இருந்த கட்சிகளை மீண்டும் ஒரே குடைக்குள் கொண்டு வரவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவிடம் 30-40-க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தங்களுடன் வரும் சிறு கட்சிகளுக்கும் சேர்த்து பாஜக சுமார் 50 தொகுதிகள் வரை கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு பின்னரே தொகுதி பங்கீடு குறித்து தெரியவரும்.

1 More update

Next Story