பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை திட்டமிட்டபடி நடக்கும் - ராமதாஸ் அறிவிப்பு

கோப்புப்படம்
பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
இருவரும் இரு அணிகளாக செயல்பட்டு வருகிற நிலையில் சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் தனது தரப்பில் பொதுக்குழுவை நடத்தி மேலும் ஒரு வருடத்திற்கு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினார். பதிலுக்கு ராமதாசும் சிறப்பு பொதுக்குழுவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்ட உள்ளதாகவும், அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியா, மகள்கள், பேரக்குழந்தைகளுடன் காரில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார். நேற்றைய தினம் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் அன்புமணி, தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது ராமதாசும் உடன் இருந்தார்.
நாளை ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ், குடும்பத்துடன் தைலாபுரம் வந்து சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாமக மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை திட்டமிட்டபடி நடக்கும் என்று ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பாண்டிச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.
எனது தலைமையில் நாளை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






