செங்கோட்டையன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதில்


செங்கோட்டையன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக  பதில்
x
தினத்தந்தி 2 Sept 2025 3:27 PM IST (Updated: 3 Sept 2025 8:30 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 5-ம் தேதி மனம் திறந்து பேச உள்ளேன். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று செங்கோட்டையன் பேசினார்.

மதுரை,

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அன்னூரில் நடந்த அந்த பாராட்டு விழாவில், மேடையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இல்லை என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார் செங்கோட்டையன்.

அதன்பிறகு தொடர்ந்து தனது பேட்டிகளில் எடப்பாடி பழனிசாமி பெயரைக் கூறுவதை தவிர்த்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பேரணியை எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார். அவர் இதற்காக கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார். ஆனால், கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கு. செங்கோட்டையன் வரவேற்பு அளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை செங்கோட்டையன் தொடர்ந்து புறக்கணித்து வந்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது.

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டம் கோபியில் கட்சி அலுவலகத்தில் வருகிற 5ம் தேதி காலை 9 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து, மனம் திறந்து பேச உள்ளேன். அதுவரை செய்தியாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.” என்றார்.

அதிமுகவில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அன்றைய தினம் என்ன பேசப்போகிறார்? சசிகலா – ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இணைக்க வலியுறுத்தப் போகிறாரா? அல்லது அதிமுகவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளாரா? என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.

இந்த நிலையில், செங்கோட்டையனின் கருத்து தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “செங்கோட்டையன் விவகாரம் குறித்து இன்று மாலை பிரசாரத்தில் பதில் அளிக்கிறேன்” என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

1 More update

Next Story