சிவகங்கை வாலிபர் மரண சம்பவம்: ராமதாஸ் கடும் கண்டனம்

சிவகங்கை வாலிபர் மரண சம்பவத்தில் உயர்அதிகாரி மீதும் கொலைக்குற்ற வழக்குப்பதிவு செய்திட வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அப்பாவி இளைஞர் அஜீத்குமார் காவல் விசாரணையில் மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளாகி இறந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நகை களவு போன புகாரில் ஐவரை பிடித்துக் கொண்டு போய் ஒருவர் தவிர அனைவரையும் விடுவித்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. அந்த ஒருவர், தனியார் காவலாளி அஜீத்குமார். இப்போது உயிரோடு இல்லை. சிவகங்கை மாவட்ட மடப்புரம் காவல் நிலையத்தின் காவலர்கள் - அதிகாரிகளின் "முறையான (?!)" விசாரணையால் அஜீத்குமார் உயிரை இழந்திருக்கிறார்.
நகைகள் களவு போனதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்த சில நிமிடங்களில் சந்தேக நபராக கருதப்பட்ட காவலாளி அஜீத்குமாரை தங்களுக்கே உரித்தான விசாரணை கொட்டடிக்கு காவல்துறையினர் கொண்டு போயிருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யாமல், முறைப்படி அவரை விசாரித்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி அனுமதி (கஸ்டடி) பெறாமல் இவ்வளவும் நடந்திருக்கிறது என்றே தகவல்கள் வருகிறது.
தமிழ்நாடு அரசு, வானளாவிய அதிகாரத்தை காவல்துறையினருக்கு கொடுத்திருக்கிறதோ என்ற கேள்வியும் அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கவேண்டிய காவல்துறை மரணத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல.
"எங்களுடைய காரை இடையூறு இல்லாமல் ஓரமாய் நிறுத்துங்கள்" என்று சொல்லித்தான் கோயிலுக்கு வந்த குடும்பத்தினர் அஜீத்குமாரிடம் கார் சாவியை கொடுத்துச் சென்றதாகவும், "திரும்பி வந்து காரை எடுக்கும் போதுதான் காரில் வைத்திருந்த நகை காணாமல் போய் விட்டதை அறிந்தோம்" என்பதாகவும்தான் வாய்மொழிப் புகாரில் சொல்லியிருந்ததாகவும் அதைத் தொடர்ந்தே காவலாளி அஜீத்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தார் நால்வரை பிடித்து கடுமையாக விசாரித்ததாகவும் மடப்புரம் பகுதி மக்கள் ஒருவர் மாறாமல் சொல்கிறார்கள்.
ஒரு புகார் வருகிறது என்றால், முதலில் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் அதை விசாரிப்பார்கள். புகார் மற்றும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்தும், உண்மை நிலையை முழுவதுமாக வெளிக்கொணர முடியாத நிலைமையும் இருக்குமானால்; குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை தலைமைக்கு (சி.பி.சி.ஐ.டி.) பரிந்துரை செய்வார்கள். அதன் பின்னரே சிறப்பு காவல் படையினர் (ஸ்பெஷல் டீம் போலீசார்) அமைக்கப்படுவார்கள்.
அஜீத்குமார் விவகாரத்தில் இது அப்படியே தலைகீழாக நடந்திருக்கிறது. புகார் கொடுத்த சில நிமிடங்களில் அஜீத்குமாரைப் பிடித்துப்போக நேரடியாக 'ஸ்பெஷல் டீம்' போலீசார் வந்துள்ளனர். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் மடப்புரம் பகுதி, கோயில் பின்புறமுள்ள கோசாலைக்கு கொண்டுபோய் அஜீத்குமாரை விசாரித்திருக்கிறார்கள். இந்து அறிநிலையத்துறை இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் விசாரணை நடந்துள்ளது. இத்தனைக்கும் அஜீத்குமார் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு (History sheeter) குற்றவாளியும் அல்ல.
புகார் கொடுத்தவர்கள் சொல்லி, மடப்புரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர், ஆய்வாளர், தலைமைக்காவலர் என்கிற ஏட்டய்யா மற்றும் காவலர்கள் பறந்து வந்து விசாரணை செய்திருக்க வாய்ப்பில்லை. தனிப்படை சிறப்புக் காவலர்களை அனுப்பி அஜீத்குமாரை கொண்டு வரச் சொல்லும் அளவுக்கு புகார் கொடுத்தவர்களின் செல்வாக்கு இருந்திருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. புகார் கிடைத்ததுமே ஸ்பெஷல் டீம் போலீசாரை விரைந்து அனுப்பிய காவல்துறையின் செல்வாக்குமிக்க அந்த உயரதிகாரி யார்?
'ஜெய்பீம்' சினிமாப் படத்தை பார்த்து விட்டு மூன்று நாள்கள் வரை உறக்கம் இல்லாமல் தவித்ததாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனைப்பட்டிருந்த அதே போன்ற சூழலைதான் தம்பி அஜீத்குமார் இறப்பு எனக்குக் கொடுத்திருக்கிறது. 'ஜெய்பீம்' படத்தில் கையாளப்பட்ட அதே மிளகாய்ப்பொடிதான் அஜீத்குமார் துன்புறுத்தலின் போதும் கையாளப் பட்டிருக்கிறது. இரும்புக்கழிகளால் தாக்கப்பட்டும், பூட்ஸ்கால்களால் மிதிபட்டும் எமர்ஜென்சி காலகட்டத்தில் கேரளத்தில் ஸ்ரீதரனும், தமிழ்நாட்டில் சிட்டிபாபுவும் சின்னாபின்னமான நினைவுகளே வந்து போகிறது.
அஜீத்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், "அஜீத்குமார் உடலில் 15 இடங்களில் கொடுங்காயம் இருக்கிறது" என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சாராம்சம் ஆகும்.
ஆறு காவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது சரியான நீதி அல்ல. அவர்கள் மீதும் அவர்களை இச்செயலுக்கு இயக்கிய "உயர்அதிகாரி" மீதும் கொலைக்குற்ற வழக்குப் பதிவு செய்திட வேண்டியது அவசியம். அதுவே சரியான நீதி.
இறந்து போன அஜீத்குமார் குடும்பத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்குவதோடு அஜீத்குமார் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கிட முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






