சிலர் கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று கூறுகிறார்கள்: திருமாவளவன் பேச்சு


சிலர் கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று கூறுகிறார்கள்: திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 13 Dec 2025 10:27 AM IST (Updated: 13 Dec 2025 10:38 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் இயக்கங்களை வெறும் சாதி சங்கங்களாக காணாமல் அவற்றை இடதுசாரிமயமாக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் 12-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமன்றி அனைத்துக் கட்சிகளையும் இடதுசாரிமயமாக்க வேண்டும். அம்பேத்கர் இயக்கங்களை வெறும் சாதி சங்கங்களாக காணாமல் அவற்றை இடதுசாரிமயமாக்க வேண்டும்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதற்காக அ.தி.மு.க.வை புறக்கணித்துவிடக் கூடாது. அந்தக் கட்சியும் இடசாரி அரசியலை அடிப்படையாக கொண்டு பெரியார் கொள்கையுடன் உருவான இயக்கமாகதான் நாம் அணுக வேண்டும். இன்று சிலர் கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று கூறி வருகின்றனர். அத்தகையவர்களுக்கு எந்த அரசியல் பணியோ, அடிப்படை பணியோ தெரியவில்லை. ஆளும் தி.மு.க. அரசு மீதும், அக்கட்சி மீதும் எங்களுக்கும் விமர்சனங்கள் உண்டு. எனினும் கூட்டணியை, உறவை, நட்பை நாங்கள் போற்றுகிறோம். வலதுசாரிகளுக்கு துணை போகிற கும்பலை ஆதரிக்க முடியாது. இடதுசாரிகள் அனைவரும் இணைந்து நிற்போம் என்று கூறினார்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் திபங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழக செயலாளர் சண்முகம், மக்கள் அதிகாரம் அமைப்பின் தமிழக செயலர் திருச்சி செழியன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பாலசுந்தரம், பாலசுப்பிரமணியன், சந்திரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story