வேலைக்கு செல்லும்படி திட்டிய தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்


வேலைக்கு செல்லும்படி திட்டிய தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்
x

கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளி ஒருவர் வேலைக்கு சென்றுவிட்டு மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு வந்தபோது, அவரது மகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவை சேர்ந்த சங்கையா மகன் முருகன் (வயது 54), கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மாரிராஜா(23), அமரர் ஊர்தி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் முருகன் நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்று விட்டு, மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது மாரிராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

இதை பார்த்த அவர், வீட்டில் தூங்கி கொண்டிருக்காமல் வேலைக்கு செல்லுமாறு மகனிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாரிராஜா தந்தையை அவதூறாக பேசி வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டுள்ளார். வீட்டிற்கு வெளியே கீழே விழுந்து தட்டுத்தடுமாறி எழுந்த அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த முருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்று மாரிராஜாவை கண்டித்துள்ளனர்.

உடனே அவர், அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்தவாறு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பலத்த காயங்களுடன் இருந்த முருகனை உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிராஜாவை கைது செய்தனர்.

1 More update

Next Story