கஞ்சா, கத்தி வைத்திருந்த வாலிபரை துரத்தி பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் தட்டப்பாறை காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் யாக்கோபு உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் நேற்று முன்தினம் (4.12.2025) காலை தட்டப்பாறை காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் யாக்கோபு, சிப்காட் காவல் நிலைய தலைமை காவலர் ரூபா ரோஸ்லின், ஆயுதப்படை காவலர்கள் ஜெயமுருகன், ஜெயந்தி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் தாமரைக்கனி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தும்போது தப்பியோட முயன்றவரை மேற்சொன்ன போலீசார் துரத்தி பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் தூத்துக்குடி பூபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கேசவன் (வயது 22) என்பதும், அவர் கஞ்சா மற்றும் கத்தி ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன வாலிபரை கைது செய்து கஞ்சா மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேற்சொன்ன வாகன தணிக்கையின் போது துரிதமாக செயல்பட்டு வாலிபரை துரத்திப் பிடித்து கைது செய்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுத்து சிறப்பாக பணிபுரிந்த மேற்சொன்ன காவல்துறையினரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று (5.12.2025) நற்பணிசான்றிதழ் வழங்கி பாராட்டினார்.






