தமிழக சட்டசபை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது.
சென்னை,
தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். அந்த வகையில், இம்மாத இறுதிக்குள் சட்டசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடும் என்று பேரவை தலைவர் அப்பாவு கடந்த நவம்பர் 25-ம் தேதி அறிவித்திருந்தார். கடந்த 2-ம் தேதி நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தை டிசம்பர் 9, 10-ம் தேதிகள் (இன்றும், நாளையும்) என 2 நாட்கள் நடத்துவது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
Live Updates
- 9 Dec 2024 8:19 AM
தமிழக சட்டசபை: டங்ஸ்டன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
மதுரையில் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம், பரபரப்பான விவாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
இதனைத்தொடர்ந்து சட்டசபை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
- 9 Dec 2024 7:17 AM
டங்ஸ்டன் சுரங்கம்: 10 மாத காலம் என்ன செய்தீர்கள்.. - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கேள்வி
சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “மாநில உரிமைகள் பறிபோகும்போதே நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஏன் உரிய அழுத்தம் தரவில்லை..? . தமிழக அரசு, மத்திய அரசுக்கு வலியுறுத்தவில்லை என சுரங்க அமைச்சகம் கூறியுள்ளது.
சுரங்கம் தொடர்பாக பிரமருக்கு எழுதிய கடிதத்தின் விவரங்களை தீர்மானத்தில் தெரிவிக்கப்படவில்லை. மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பின்னரே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் 10 மாதமாக தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே டங்ஸ்டனுக்கு ஏற்கனவே எதிர்ப்பை பதிவு செய்தோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தெரிவித்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விக்கு அவை முன்னவர் துரை முருகன் பதிலளித்து வருகிறார். தற்போது இதுதொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
- 9 Dec 2024 6:22 AM
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது
டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியையும் வழங்கக்கூடாது என்றும், சுரங்கத்திற்கு தேர்வான பகுதி ஏற்கனவே பல்லுயிர் பெருக்கத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுவதாக சட்டசபையில் தீர்மானத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் முன் மொழிந்தார்.
மேலும் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசும், மக்களும் ஏற்க மாட்டார்கள் என்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு எதிர்த்த போதும் சுரங்க ஏல நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.
சட்டசபை உறுப்பினர்களின் கருத்துகளுக்குப் பின்னர் தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தற்போது இதுதொடர்பாக சட்டசபை உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள்.
- 9 Dec 2024 5:49 AM
தமிழகத்தில் 11 ஆயிரத்து 509 மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன - அமைச்சர் செந்தில் பாலாஜி
அம்பத்தூர் எம்.எல்.ஏ கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன. இவற்றை புதைவிட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், அம்பத்தூர் தொகுதியும் உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து 150 மின் மாற்றிகளை மாற்றுவது குறித்து அ.தி.மு.க.வின் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 509 மின்மாற்றிகள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளன. மதுரை திருமங்கலம் தொகுதியிலும் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
மேலும் திருப்போரூர் கோவளத்தில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
- 9 Dec 2024 5:29 AM
துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு சட்டசபையில் 3-வது இருக்கை
தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு சட்டசபையில் 3-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்-அமைச்சர், அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. முன்னதாக அமைச்சராக இருந்தபோது முதல் வரிசையில் 13வது இருக்கை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- 9 Dec 2024 5:17 AM
இதுவரை இல்லாத அளவுக்கு நகராட்சிகளுக்கு அதிக அளவு நிதி - அமைச்சர் கே.என். நேரு
மதுரையில் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என். நேரு, “இதுவரை இல்லாத அளவுக்கு நகராட்சிகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து நகராட்சிகளிலும், கால்வாய் தூர் வாருதல், மழைநீர் வடிகால் பணிகள் நடக்கின்றன.
மதுரை புறநகர் பகுதியில் ரூ. 2 ஆயிரம் கோடியிலும், மதுரை மாநகர் பகுதியில் ரூ. 1,500 கோடியிலும் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு மழைநீர் வடிகால்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
- 9 Dec 2024 5:09 AM
கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், “சோமரசம்பேட்டை அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது, வேண்டுமென்றால் அந்த பகுதியில் உய்யகொண்டான் கால்வாய் சீரமைத்து தரப்படும். உய்யகொண்டான் கால்வாய் 69 கி. மீ தூரம் சொல்கிறது, வேளாண் பாசனத்திற்கான கால்வாய் இது. இதன் மூலம் தஞ்சை திருச்சியில் 40,000 ஏக்கர் நிலங்கள் 11 மாதங்கள் பாசன வசதி பெறுகிறது.
கீழ்பெண்ணாத்தூர் கிளிஞ்சல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை விரைவில் திறக்கப்படும் ” என்று அவர் கூறினார்.
- 9 Dec 2024 4:32 AM
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கூட்டம் தொடங்கியது: முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்
இன்று காலை தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கான இரங்கல் தீர்மான உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.