பல பெண்களுடன் பழக்கம்: கள்ளக்காதலனை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பெண் செய்த சம்பவம்


பல பெண்களுடன் பழக்கம்: கள்ளக்காதலனை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பெண் செய்த சம்பவம்
x

நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோர தடுப்புச்சுவரின் மீது அமர்ந்து இருவரும் மது அருந்தி உள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசி வள்ளுவர் வீதி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பராஜ் ( வயது 63). இவர் அவினாசி சிந்தாமணி தியேட்டர் பகுதியில் மர அரவை ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.இந்தநிலையில் சின்னப்பராஜிக்கும் அவினாசி நடுவச்சேரி பகுதியில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளியான நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த பூமணி (42) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியதுடன், உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.

இதனிடையே சின்னப்பராஜ் மேலும் சில பெண்களுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பூமணி தட்டிக்கேட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்தநிலையில் பூமணி, இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என கூறி சின்னப்பராஜை ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார். பெண்ணின் ஆசைவார்த்தையை நம்பி சின்னப்பராஜ் சென்றுள்ளார். நேற்று இரவு 2 பேரும் அவினாசி' சின்னேரி பாளையம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோர தடுப்புச்சுவரின் மீது அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பூமணி, தான் கொண்டு வந்திருந்த செல்போன் பவர் பேங்கால் சின்னப்ப ராஜின் தலையில் கடுமையாக தாக்கினார்.

இதில் நிலை தடுமாறிய சின்னப்பராஜ் கீழே விழுந்தார். பின்னர் ஏற்கனவே திட்டமிட்டு கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சின்னப்பராஜ் மீது ஊற்றினார். அதிர்ச்சி அடைந்த அவர் உயிர் பிழைக்க தப்பி ஓட முயன்றார். ஆனால் ஆத்திரம் தீராத பூமணி, சின்னப்ப ராஜின் உடலில் தீயை பற்ற வைத்தார். ஏற்கனவே தலையில் பட்ட காயத்தால் நிலை குலைந்த சின்னப்பராஜ், உடலில் தீப்பற்றி பாதி எரிந்த நிலையில் சாலை யோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

இதையடுத்து வீட்டுக்கு சென்ற பூமணி, அதிகாலை அவினாசி போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயில் கருகி கிடந்த சின்னப்பராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்தி விசாரணை வருகின்றனர்.

1 More update

Next Story