மருத்துவமனைகள் கூட கொலைக் களங்களாக மாறும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு - அன்புமணி


மருத்துவமனைகள் கூட கொலைக் களங்களாக மாறும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு - அன்புமணி
x

ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 கொலைகள் நடக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை திமுக அரசு சீர்லைத்திருக்கிறது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிர்காக்கும் மருத்துவமனைகளைக் கூட மக்களுக்கு பாதுகாப்பில்லாத கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக இன்று அதிகாலை மருத்துவமனைக்கு வந்த ஆதி என்ற இளைஞரை, தலைக்கவசம் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் மகப்பேறு பிரிவுக்குள் புகுந்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. இந்தக் கொலையை செய்த கூலிப்படையினரை காவல்துறையினரால் இது வரை கைது செய்ய முடியவில்லை.

கொலை செய்யப்பட்ட ஆதி மீது கொலை வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பின்னணி கொண்டவர்கள் 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் அவர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

ஆயிரக்கணக்கான நோயர்கள் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், கூலிப்படையினர் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்குள் நுழைந்து கொடூரக் கொலையை நிகழ்த்தியிருக்க முடியாது. கொலையாளிகள் தப்பி ஓடியதைக் கூட காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளை கண்காணித்தல், மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளித்தல் என இரு அடிப்படை பணிகளிலுமே காவல்துறை தோல்வி அடைந்து விட்டது.

கிண்டி மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக் குத்து, தஞ்சாவூர் அரசு பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை என புனிதமாக மதிக்கப்பட வேண்டிய இடங்களில் கூட படுகொலைகள் நிகழும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்திருக்கிறது. கொலை நடக்காத நாள்களே இல்லை என்ற நிலை மாறி ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 கொலைகள் நடக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை திமுக அரசு சீர்லைத்திருக்கிறது.

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான ஒரே வ்ழி திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றுவது தான். பாதுகாப்பான தமிழகம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து திமுகவை விரட்டியடிப்பார்கள் என்பது உறுதி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story