திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

முன்னீர்பள்ளம் அருகே பொன்னாக்குடியில் முன்விரோதத்தின் காரணமாக, ஒரு வாலிபரை, அதே ஊரைச் சேர்ந்த 4 பேர் தாக்கி கொலை முயற்சி செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே பொன்னாக்குடியில் கடந்த 2021-ம் ஆண்டு முன்விரோதத்தின் காரணமாக, ஆனந்தசித்தன் (வயது 24) என்பவரை, அதே ஊரைச் சேர்ந்த 4 பேர் தாக்கி கொலை முயற்சி செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குற்றவாளிகளான மாரியப்பன்(45), செல்வகுமார்(25), மாரியப்பன்(எ) அருண்(22), பாண்டி(25) ஆகிய 4 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் அமிர்தவேலு நேற்று அந்த 4 பேருக்கும் தண்டனை வழங்கினார்.
தண்டனை விபரம் பின்வருமாறு:
IPC 307-ன்படி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதமும், IPC 506(2)-ன்படி 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதமும், IPC 341-ன்படி 1 மாதம் சாதாரண சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் மேற்சொன்ன குற்றச்சாட்டுகளின் கீழ் விதிக்கப்பட்ட சிறை தண்டனைகளை ஏககாலத்தில் (concurrent) அனுபவிக்க வேண்டும் என முதன்மை நீதித்துறை நடுவர் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், சாட்சியங்களை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வந்த அன்டோ ஆரோக்கியராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், முன்னீர்பள்ளம் காவலர்கள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் சேவியர்பாண்டியன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ம் ஆண்டில் இதுவரை 12 கொலை முயற்சி வழக்குகளில், சம்பந்தப்பட்ட 19 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் 1 குற்றவாளிக்கு 12 வருடங்கள் சிறை தண்டனையும், 7 குற்றவாளிகளுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 2 குற்றவாளிகள் சரித்திர பதிவேடு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.






