திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த நபரை, பணகுடியைச் சேர்ந்த ஒருவர் ஆயுதத்தால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) என்பவருக்கும் பணகுடியைச் சேர்ந்த சுமன்(37) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுமன், சுரேஷ்குமாரை ஆயுதத்தால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வள்ளியூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில், விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று குற்றவியல் நீதித்துறை நடுவர் மோசஸ் ஜெபசிங், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சுமன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேற்சொன்ன அபராத தொகையை, கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், காவல் அதிகாரிகள், காவலர்கள், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் (தற்போது ஓய்வு), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆலன்ராயன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில், சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.






