திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 22 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 23 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் புலியூர்குறிச்சி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 57) என்பவர் அதே ஊரை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, செல்வகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில், செல்வகுமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நேற்று அவருக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் காவல்துறையினர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 22 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 23 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், 2 சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டில் மட்டும் சரிந்திர பதிவேடு உடைய நபர்கள் 25 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் கொலை வழக்கில் 21 நபர்களுக்கும், கொலை முயற்சி வழக்கில் 2 நபர்களுக்கும், போக்சோ வழக்கில் 2 நபர்களுக்கும் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com