த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி. தினகரன் விரும்பினார் - செங்கோட்டையன்

ராமதாசுடன் கூட்டணி தொடர்பாக பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதில் அளித்தார்.
சென்னை,
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. ஆளும் கட்சிக்கு முன்னரே முந்தி கொண்ட பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரசார தேரை ஓட்ட தொடங்கி விட்டார்.
அதே சமயத்தில், மகளிருக்காக செயல்படுத்திய திட்டங்கள் உள்பட தாங்கள் கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால், ஆளும் கட்சியான தி.மு.க. நிச்சயம் வருகிற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. இருந்தாலும், ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதேசமயம் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க.வும் தீவிரமாக இறங்கியுள்ளது. நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கிறது. நடிகர் விஜய் நடத்தி வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆளுங்கட்சியான தி.மு.க.வும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யோ, சாத்தியமான திட்டங்களை மட்டுமே மக்களுக்காக நிறைவேற்றுவோம் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் கோவையில் த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி. தினகரன் விரும்பினார். சூழ்நிலை காரணமாக டி.டி.வி. இந்த முடிவை எடுத்துள்ளார். எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.. யாருடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை என கூறினாலும் டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள். பிரச்னை எங்களுக்கு தானே தெரியும். நான் சொல்லாமல் இருக்கும் வரை நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ராமதாசுடன் கூட்டணி தொடர்பாக பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு “நல்லது நடக்கட்டும்” என்று பதில் அளித்து விட்டு சென்றார். முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
திமுக கூட்டணிக்குள் ராமதாஸ் வருவதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அதிமுக கூட்டணியிலும் ராமதாஸ் தரப்பை சேர்க்கக்கூடாது என அன்புமணி நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன்படி ஓரிரு நாட்களில் செங்கோட்டையன் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாமக (ராமதாஸ்) திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.






