குடும்ப தகராறில் கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி, மகள்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்த ஒரு பெயிண்டர், கொழுப்பு கட்டிகள் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு (வயது 55), பெயிண்டர். இவரது மனைவி மகாலட்சுமி(43). இவர்களுக்கு தமிழ்செல்வி(25), சாரதா(20) என 2 மகள்கள் உள்ளனர். பழனிவேலுவுக்கு கொழுப்பு கட்டிகள் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று பழனிவேலுவை திடீரென காணவில்லை. இதுகுறித்து அவரது சகோதரி காவிரி, மகாலட்சுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பழனிவேலுக்கு கொழுப்பு கட்டிகள் உள்ளதால் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். வெகு நாட்களாகியும் காவிரியால், பழனிவேலுவை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் காவிரியை செல்போனில் தொடர்பு கொள்ளவில்லை.
இதனால் சந்தேகமடைந்த காவிரி, நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் பழனிவேலுவை காணவில்லை என்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சந்தேகத்தின்பேரில் மகாலட்சுமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மகாலட்சுமி தனது கணவனை கொலை செய்து விட்டு, மகள்களுடன் சேர்ந்து உடலை புதைத்து நாடகம் ஆடியது தெரியவந்தது.
மேலும் மகாலட்சுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனக்கும், பழனிவேலுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது என்னை அவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், பழனிவேலுவை தாக்கியபோது அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவரது உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறையில் குழிதோண்டி புதைத்தேன். பின்னர் எதுவும் தெரியாமல் இருந்து வந்தேன். இதற்கு எனது 2 மகள்களும் உடந்தையாக இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மகாலட்சுமி, தமிழ்செல்வி, சாரதா ஆகிய 3 பேரையும் போலீசார் பழனிவேலுவை புதைத்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் டாக்டர் வரவழைக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. இதையடுத்து மகாலட்சுமி, அவரது மகள்கள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






