சரித்திரம் படைத்த ஒப்பந்தம் இது

இந்தியாவில் இருந்து வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது இங்கிலாந்து நாட்டில் முழு சுங்கவரி விலக்கு கிடைக்கும்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால், தங்கள் நாட்டுக்குள் வரும் பொருட்களுக்கு அபரிமிதமான வரி விதிப்போம் என்று இந்தியாவை அமெரிக்கா மிரட்டிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து பேசியதன் விளைவாக சரித்திரம் படைக்கும் ஒப்பந்தம், அதாவது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே இந்தியா தென்கிழக்கு ஆசியா கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பூடான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ், நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து நாடுகளோடு இந்தியா தடையில்லா வர்த்தகம் செய்துள்ளது. மேலும் அமெரிக்கா உள்பட பல நாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் பரஸ்பர வர்த்தகம் 2030-ல் இருமடங்காக உயர்ந்து 112 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9½ லட்சம் கோடி அளவுக்கு உயரும். மொத்த ஏற்றுமதியில் 99 சதவீத பொருட்களுக்கு '0' (பூஜ்யம்) வரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பொருட்களுக்கும் பெருமளவில் வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து முழுமையான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு ரூ.2 லட்சம் கோடி வர்த்தக வாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் இருந்து வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது இங்கிலாந்து நாட்டில் முழு சுங்கவரி விலக்கு கிடைக்கும். இதனால் இறைச்சி, பால் பொருட்கள், டீ, காபி, வாசனை பொருட்கள், பழங்கள், காய்கறிகளை ஏற்றுமதி செய்யும்போது இந்திய விவசாயிகளுக்கு பெரும் பலன் கிடைக்கும்.
அதிக வேலைவாய்ப்பு தரும் ஜவுளி, காலணிகள், ரசாயனங்கள், உலோகங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் போன்ற தொழில்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு பன்மடங்காக பெருகும். அதுபோல என்ஜினீயரிங் பொருட்கள் ஏற்றுமதி இன்னும் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி 7.95 பில்லியன் டாலர் (சுமார் ரூ.68 ஆயிரம் கோடி) அளவுக்கு தலை நிமிர்ந்து நிற்கும். இங்கிலாந்து நாட்டில் வேலைபார்க்கும் 75 ஆயிரம் இந்தியர்கள் செலுத்தவேண்டிய சமூக பாதுகாப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் வருமானத்தில் நிறைய மிச்சம் பிடிக்கமுடியும். தமிழ்நாட்டுக்கும் இந்த ஒப்பந்தத்தின்மூலம் பல நன்மைகள் காத்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து மஞ்சள், காஞ்சிபுரம் சேலைகள், திருப்பூர் பின்னலாடைகள், தஞ்சாவூர் பொம்மைகள், வேலூர் காலணிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை இங்கிலாந்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராகிவிட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பல பொருட்களின் அதாவது குளிர்பானங்கள், அழகுசாதன பொருட்கள், மருத்துவ உபகரணங்களுக்கான சராசரி வரி 15 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதுபோல விஸ்கி, ஜின் ஆகியவற்றின் வரி 150 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாகவும், கார்களுக்கான வரி 110 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் குறைகிறது. இதனால் ரோல்ஸ் ராய்ஸ், பெண்ட்லி போன்ற உயர் ரக சொகுசு கார்களின் விலை 50 சதவீதம் வரை குறையும். ஆக இங்கிலாந்துக்கு இந்தியாவில் இருந்து பொருட்களை அனுப்பும் ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தகம் தழைத்து நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் அரசுகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பயன் அளிக்கும் ஒப்பந்தமாகும்.






