சென்னைக்கு தெற்கே 170 கி.மீ. தொலைவில் ‘டிட்வா’ புயல்.. நகரும் வேகம் அதிகரிப்பு


சென்னைக்கு தெற்கே 170 கி.மீ. தொலைவில் ‘டிட்வா’ புயல்.. நகரும் வேகம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 Nov 2025 11:52 AM IST (Updated: 30 Nov 2025 2:35 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 24 மணிநேரத்தில் காரைக்கால் பகுதியில் 19 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் ‘டிட்வா’ புயல் காரைக்காலுக்கு கிழக்கு-வடகிழக்கில் சுமார் 100 கிமீ, வேதாரண்யத்திற்கு வடகிழக்கில் 140 கிமீ மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கில் 170 கிமீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

‘டிட்வா’ புயல் அடுத்த 24 மணி நேரத்தில் இது வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. வடக்கு நோக்கி நகரும் போது, ​​சூறாவளி புயல் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்று (நவம்பர் 30) ​​நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையிலிருந்து குறைந்தபட்சம் 70 கி.மீ மற்றும் 30 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் காரைக்கால் பகுதியில் 19 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மயிலாடுதுறை செம்பனார்கோயில் பகுதியில் 17 செ.மீ. கனமழை பெய்தது. நாகையில் 15, திருவாரூரில் 14, ராமநாதபுரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இதற்கிடையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்த புயல் தெலுங்கானாவையும் தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த புயல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையிலிருந்து 50 முதல் 60 கிலோமீட்டர் தொலைவில் கடக்கும் என்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தப் பகுதியில் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் KKSSR ராமச்சந்திரன், “காவிரிப் படுகை மாவட்டங்களில் சுமார் 56,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை நின்ற பிறகு பயிர் பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். 38 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு 2,330 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை பாதிப்புகளால் தூத்துக்குடி, மயிலாடுதுறை, தஞ்சையில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story