லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 95 பேர் பலி


லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 95 பேர் பலி
x
தினத்தந்தி 1 Oct 2024 7:27 AM GMT (Updated: 1 Oct 2024 8:11 AM GMT)

கடந்த 24 மணி நேரத்தில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். 172 பேர் காயமடைந்துள்ளனர்

பெய்ரூட்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

அந்தவகையில் லெபனான் தலைநகர் பெரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடத்தை குறிவைத்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை குண்டுமழை பொழிந்தது. இந்த அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அதேபோல், லெபனானின் தெற்கு பகுதி, தலைநகர் பெரூட் உள்பட பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், லெபனானின் வெவ்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 95 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 172 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் நேற்று இரவு தெரிவித்துள்ளது.

பால்பெக்-ஹெர்மல் மாவட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும், மேலும் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், 55 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, பெய்ரூட்டில் நான்கு இறப்புகள் மற்றும் நான்கு காயங்கள் பதிவாகியுள்ளன, தெற்கு கவர்னரேட்டில் 52 கொல்லப்பட்டதாகவும் மற்றும் 43 காயமடைந்ததாகவும், பெக்கா பகுதியில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 22 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story