இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: யாருக்கு ஆதரவு? - இலங்கை பதில்


இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: யாருக்கு ஆதரவு? - இலங்கை பதில்
x
தினத்தந்தி 8 May 2025 6:58 PM IST (Updated: 8 May 2025 7:32 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவும் பாகிஸ்தானும் அவ்வப்போது எங்களுக்கு உதவுகின்றன என்று இலங்கை தெரிவித்துள்ளது.

கொழும்பு,

பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் மீது இந்தியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற இந்த அதிரடி வேட்டையில் ஈடுபட்டது. இதில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதோடு, 70 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், அணிசேரா கொள்கையை கடைபிடிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில்,

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடைபெறும் இந்த சண்டைகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்பது எங்கள் நிலைப்பாடு. எங்களின் வான்வெளி மற்றும் எங்கள் பிரதேசத்தை பயன்படுத்தி, மற்றொரு நாட்டை தாக்குவதை அனுமதிக்க மாட்டோம். எந்த வகையான பயங்கரவாதத்தையும் நாங்கள் அங்கீகரிக்கவும் மாட்டோம், ஆதரிக்கவும் மாட்டோம், பயங்கரவாதத்தை தடுப்பதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அவ்வப்போது எங்களுக்கு உதவுகின்றன; எதிர்காலத்திலும் எங்களுக்கு உதவ உள்ளன. எனவே நாங்கள் இருவருடனும் நல்ல இராஜதந்திர உறவுகளைப் பேணுகிறோம். நாங்கள் எங்கள் இறையாண்மையைப் பாதுகாப்போம், அணிசேரா அணுகுமுறையைப் பின்பற்றுவோம்; யாருக்கும் ஆதரவில்லை.

பிராந்திய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் அமைதியே இலங்கை அரசின் விருப்பம். போர் பதற்றத்தைத் தணிக்க இலங்கை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பிரச்சினைகளை அவர்களே பேசி தீர்க்க வேண்டும். நிலைமையை வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story