தமிழ் படிக்கத் தெரியாமல் நின்ற மற்றொரு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்


தமிழ் படிக்கத் தெரியாமல் நின்ற மற்றொரு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
x
தினத்தந்தி 26 March 2024 12:56 PM GMT (Updated: 26 March 2024 12:57 PM GMT)

மக்களவை தேர்தல் களத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.

சென்னை,

சீமான் நாம் தமிழர் என்ற கட்சியை நடத்தி வருகிறார். தமிழ் மொழி, தமிழர் நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டதுதான் நாம் தமிழர் கட்சி. சீமான் மேடைகளில் நரம்பு முறுக்கேற்றி ஆவேசமாக பேசும் பாணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. திரைப்பட இயக்குநர், நடிகராக இருந்ததால் சீமானின் எதுகை மோனை பேச்சும் எளிதில் கவர்கின்ற வசனங்களும் கூட்டத்தை அப்படியே கட்டிப் போடும். அவரது பேச்சுக்கள் அனைத்தும் அனல் பறக்கும். இதற்கு முன்னர் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அப்படி பேசினார்.

இந்தநிலையில் தற்போது மக்களவை தேர்தல் களத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதிகளிலும் தனித்தே களம் காண்கிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில் பலரும் டாக்டர்கள். இவர்களில் ஒருவர்தான் விருதுநகர் கவுசிக்.

நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் கவுசிக் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலின் போது தேர்தல் உறுதிமொழி பத்திரத்தை வேட்பாளர் வாசிக்க வேண்டும். ஆனால் டாக்டர் கவுசிக்கோ தமக்கு தமிழில் பேசத் தெரியும். தமிழில் படிக்கத் தெரியாது என கூறியிருக்கிறார். இது நாம் தமிழர் கட்சியினரை மட்டுமல்ல, தேர்தல் அதிகாரிகளையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனையடுத்து தேர்தல் அலுவலர் ஜெயசீலன், தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தை வாசிக்க அதனை அப்படியே டாக்டர் கவுசிக் வாக்க உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்கும் நிலையில், இன்று நடந்த வேட்புமனுத் தாக்கலின்போது, தமிழில் எழுதி இருந்த உறுதிமொழிப் பத்திரத்தை படிக்கத் தெரியாமல் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி நாதக வேட்பாளர் ஜெகதீஸ் சுந்தர் எம்.இ, எல்.எல்.பி திக்கி திணறி நின்றார். தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் வாசிக்க, அதனை திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். முகப்பேரில் உள்ள பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி ஆசிரியராக இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு தமிழ் படிக்கத் தெரியாதா? என்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.


Next Story