பா.ஜ.க. கூட்டணியின் கூடாரம் கலகலத்துவிட்டது - தி.மு.க. அறிக்கை


பா.ஜ.க. கூட்டணியின் கூடாரம் கலகலத்துவிட்டது - தி.மு.க. அறிக்கை
x
தினத்தந்தி 1 April 2024 9:29 AM GMT (Updated: 1 April 2024 11:39 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வென்று ஆட்சியை அமைக்கும் என்று தி.மு.க. தெரிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு இரண்டு எஜமானர்கள் உண்டு. ஒன்று எங்கள் மனச்சாட்சி, மற்றொன்று நாங்கள் மதிக்கும் மக்கள் என்றார் பேரறிஞர் அண்ணா. இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள சமத்துவம், சகோதரத்துவம் ஜனநாயக குடியரசு என்னும் கோட்பாடுகளுக்கு எதிராக நாட்டை ஜாதி, மத உணர்வுகளுடன் பிளவுபடுத்திவிட்டது பா.ஜ.க. ஆட்சி என்று மனச்சாட்சி சொல்கிறது என்ற அடிப்படையில் மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலை அணுகுகிறார்கள்.

இந்திய அரசியலில் மக்களை நேருக்கு நேர் சந்திப்பதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போல வேறொரு தலைவர் இல்லை என்று துணிந்து கூறலாம். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளுக்கும் நடைபயணமாகவே சென்று மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அந்தக் குறைகளை 100 நாட்களுக்குள் தீர்ப்பேன் என வாக்குறுதி அளித்து, தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாள் முதல் 100 நாட்களில் மக்கள் வழங்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிச் சாதனைகள் படைத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதேபோல, இப்பொழுது நடைபெறுகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைச் சந்திப்பதற்காகத் தொகுதிதோறும் பயணம் சென்று பிரச்சாரம் செய்கிறார். காலையில் ஆங்காங்கே நடைபயிற்சிகளை மேற்கொண்டு, மக்கள் அதிகம் கூடும் காய்கறிச் சந்தை போன்ற இடங்களுக்குச் சென்று மக்களை நேருக்கு நேர் சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்கிறார்.

அப்போது, மூன்றாண்டு கால ஆட்சியில் முதல்-அமைச்சர் நிறைவேற்றியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், நான் முதல்வன் முதலிய பல திட்டங்கள் அவற்றின் மூலம் அடைந்த பயன்களை மக்கள் எடுத்துக்கூறி முதல்-அமைச்சரைப் பாராட்டி வருவதைத் தொலைக்காட்சிகள் வாயிலாக நம்மால் காண முடிகிறது.

கடந்த 22.3.2024 வெள்ளிக்கிழமை அன்று முதல்-அமைச்சர் திருச்சியில் தொடங்கிய தேர்தல் பிரச்சாரப் பயணம் இதுவரை திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு நீண்டுள்ளது. இதுவரை இந்தப் பயணத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஏறத்தாழ 1,930 கிலோ மீட்டர் பயணம் செய்து முதலமைச்சர் அவர்கள் ஏறத்தாழ 2 கோடி மக்களைச் சந்தித்துள்ளார்.

இந்தத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது, பா.ஜ.க. அரசின் பாசிச, மத வெறி போக்கை மக்களிடம் எடுத்துரைத்து வருகிறார். வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடிப்படையில் சாதி மத மொழி இன வேறுபாடுகளின்றிச் சகோதரர்களாக கூடி வாழும் மக்களிடையே பேதத்தை வளர்க்கிறது பா.ஜ.க. அரசு.

எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, பெட்ரோல் டீசல் விலைகளை தாறுமாறாக உயர்த்திவிட்டது பா.ஜ.க. ஆட்சி, அதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உட்பட எல்லாப் பொருள்களின் விலைவாசிகளும் உயர்ந்துவிட்டன என்பதைக் சுட்டிக்காட்டுகிறார். தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. புரிந்துள்ள மாபெரும் இமாலய ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார். இதனால், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியின் கூடாரம் கலகலத்து விட்டது.

இப்படி, மக்களின் பிரச்சினைகளைக் கவனிக்காமல், மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தியுள்ள பா.ஜ.க. மற்றும் அ,தி.மு.க. பாட்டாளி மக்கள் கட்சி முதலான சந்தர்ப்பவாத கட்சிகளின் வேட்பாளர்களை தோல்வியுறச் செய்து, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்றும் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி அரசு அமைந்திட உதவ வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

முதல்-அமைச்சரின் இத்தகைய பிரச்சாரமும், எளிமையான அவருடைய அணுகுமுறைகளும் இந்தியா கூட்டணியின் செல்வாக்கினை மக்களிடையே வளர்த்துள்ளது. பா.ஜ.க. முதலான கட்சிகளுக்கு எதிரான சிந்தனைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. எஞ்சியுள்ள நாட்களில் இந்தச் செல்வாக்கு மேலும் அதிகரித்து தமிழ்நாடு,புதுச்சேரி மாநிலங்களிள் 40 தொகுதிகளையும் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வெல்லும்!. நாடு முழுவதிலும் இந்தியா கூட்டணி வென்று ஆட்சியை அமைக்கும்! இதை தேர்தல் முடிவுகள் சொல்லும்!. இது உறுதி என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரப் பயணம் நிரூபித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story